உலக நாடுகளே இது உங்களுக்கான அவமானம்: ஆப்கன் பெண்கள் உரிமை அமைப்பின் தலைவர் வருத்தம் 

உலக நாடுகளே இது உங்களுக்கான அவமானம்: ஆப்கன் பெண்கள் உரிமை அமைப்பின் தலைவர் வருத்தம் 
Updated on
1 min read

உலக நாடுகளே இது உங்களுக்கான அவமானம் என்று ஆப்கனில் தொடர்ந்து பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் மெகபூபா சிரஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில் ஆப்கனின் நிலைமை குறித்து, அந்நாட்டில் தொடர்ந்து பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் மெகபூபா சிரஜ் கூறும்போது, “நான் இந்த உலக நாடுகளுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானில் நடப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். இது உங்களுக்கு அவமானம். உலகத்தின் அங்கமாக உள்ள நாட்டிற்கு இது நடந்துள்ளது. நீங்கள் எங்களைப் பயன்படுத்திக் கொண்டீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. உண்மை என்னவென்றால் உலக நாடுகளே உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

நாங்கள் உங்களிடம் பேசவும் விரும்பவில்லை. ஏனென்றால் பேசுவதற்கான காலம் முடிந்துவிட்டது. நாங்கள் பேசினோம், நாங்கள் வலியுறுத்தினோம். நாங்கள் எங்களால் முயன்ற அனைத்தையும் செய்துவிட்டோம். ஆனால், யாரும் எங்கள் மீது கவனம் கொள்ளவில்லை. ஆப்கானியர்கள் மீண்டும் வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் மீண்டும் அவர்களுடன் சண்டையிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in