

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியை முழுமையாக நம்பினோம் என்று அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் ரஹினா ஹமிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆப்கன் கல்வித்துறை அமைச்சர் ரஹினா ஹமிதி பிபிசி தொலைக்காட்சி நேர்காணலில் கூறும்போது, “நான் அதிர்ச்சியிலும் அவநம்பிக்கையிலும் இருக்கிறேன். இதில் சோகம் என்னவென்றால் நான் இதனை எதிர்பார்க்கவில்லை. ஆப்கன் அதிபரை நாங்கள் முழுமையாக நம்பினோம். அஷ்ரப் கானி இன்னமும் நாட்டிலிருந்து வெளியேறவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அவர் உண்மையில் ஆப்கனிலிருந்து வெளியேறி இருந்தால் இது மிகப் பெரிய அவமானமாகும்” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கனிலிருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இந்த நிலையில் மீண்டும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைக்க உள்ளனர். இதனால் ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது.