Last Updated : 16 Aug, 2021 09:22 AM

 

Published : 16 Aug 2021 09:22 AM
Last Updated : 16 Aug 2021 09:22 AM

ரத்தகளரியாக்க விரும்பவில்லை: ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார் அஷ்ரப் கானி: அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்

காபூலில் உள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றி அதில் அமர்ந்துள்ள தலிபான் தீவிரவாதிகள் | படம் உதவி ட்விட்டர்

காபூல்


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து கைபற்றியவுடன், அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டு வெளியேறினார். அதிபர் மாளிகைக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்தனர். 20 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஆப்கானில் தலிபான் ஆட்சிக்கு வழிஏற்பட்டுள்ளது.

அமெரி்க்காவில் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை அகற்றிய அமெரிக்கா அங்கு ஜனநாயக முறைப்படியான ஆட்சியை நிறுவியது. அப்போது முதல் கடந்த 20ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள், நேட்டோ, ஐரோப்பியபடைகளுடன் தலிபான்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுவந்தனர்.

ஆனால், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்து வெளிேயறத் தொடங்கியபின், மிகவிரைவாக ஆப்கானை தங்கள் வசம் தலிபான்கள் கொண்டுவந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் வந்தால், காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடைமுறைக்குவரும், பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும், குழந்தை பெற்றுத் தரும் எந்திரமாகவே பெண்கள் நடத்தப்படுவார்கள், போதைப்பொருள் புழக்கம், விற்பனை, ஆயுதங்கள் விற்பனை அதிகரிக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

காபூல் நகருக்குள் தலிபான்கள் வந்துவிட்டதையடுத்து, நேற்று இரவுமுதல் காபூல் நகருக்கு வர்த்தகரீதியான விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், காபூலில் வசித்துவரும் அமெரிக்க மக்கள் மிக விரைவாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று அங்கிருந்து வெளியேறுமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த இரு வாரத்தில் மட்டும் தலிபான்கள் 13 மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். காபூல் நகருக்குள் தலிபான்கள் வந்துவிட்டதை உறுதி செய்த அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளிேயறி தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் மாளிகைக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து, அதைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அஷ்ரப் கானி தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ இப்போதிருந்து ஆப்கானிஸ்தானுக்கும், மக்களுக்கும் தலிபான்கள்தான் பொறுப்பு. மக்களின் மரியாதை,சொத்து, பாதுகாப்பு அனைத்துக்கும் தலிபான்கள் பொறுப்பேற்கவேண்டும். ஆயுதங்கள் ஏந்திய தலிபான்கள் அல்லது 20 ஆண்டுகாலம் என் உயிரைக் காப்பாற்றிய அன்புக்குரிய தேசத்தை விட்டுச் செல்வதா என்ற ஊசலாட்டம் இருந்தது. ஆனால், தலிபான் தீவிரவாதிகள் கத்தியின், துப்பாக்கி முனையில் நாட்டை வைத்துள்ளார்கள்.அவர்களால் நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியாது.

நான் வெளியேறாவிட்டால், ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள், காபூல் நகரம் சின்னபின்னாகும், மிகப்பெரிய மனிதப்பேரழிவு நிகழும், 60 லட்சம் மக்கள் வாழும் நகரம் ரத்தக்களறியாகும். காபூல் நகரை ரத்தக்களரியாக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அப்துல்லா அப்துல்லா வீடியோவில் கூறுகையில் “ இதுபோன்ற கடினமான நேரத்தில் ஆப்கானிஸ்தானை வி்ட்டு அஷ்ரப் கானி சென்றிருக்க கூடாது. அவருக்குகடவுள்தான் நம்பிக்கை அளிக்க வேண்டும். இந்த கடினமான இரவும் பகலும் கடக்கட்டும். மக்களுக்கு அமைதியான நாட்கள் கிடைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x