

தலிபான்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுமார் 20,000 ஆப்கானியர்களை கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ கனடா அரசுக்காக பணியாற்றிய மொழி பெயர்ப்பாளர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் போன்றவர்களை வரவேற்பதற்கான முயற்சி தொடங்குகிறோம். ஆப்கானிதானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆப்கன் மக்களின் வாழ்க்கை அச்சுறுதலுக்கு தள்ளப்படுகிறது. எனவே பெண் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள்,ஆப்கன் சிறுபான்மையினர், எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தை சேர்ந்தவர்கள் என 20,000 பேரை கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சில தினங்களுக்கு முன்னர், வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். சுமார் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.