

ஆப்கானிஸ்தானின் மற்றொரு மாகாண தலைநகரான காந்தகார் நகரையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்கள் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியாமல் ஆப்கான் அரசு திணறிவருகிறது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 12 மாகாணங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன. அந்நாட்டிலேயே 2-வது மிகப்பெரிய நகரம் காந்தகார். அந்த நகரையே தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
காந்தகார் நகரம் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, அங்குள்ள அரசு அதிகாரிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், சாலை மார்க்கமாகவும், விமானம் மூலமும் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.
தலிபான்கள் நேற்று முன்தினம் ஹிரத் நகரைக் கைபற்றினர், அங்குள்ள மிகப்பெரிய மசூதியையும் தங்கள் வசம் கொண்டுவந்தனர். அந்த மசூதி கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.
மன்னர் அலெக்சாண்டர் படையெடுப்பின்போது அந்த மசூதி சேதப்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த மசூதியையும் தலிபான்கள் வசம் சென்றுவிட்டது. மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹிரத் நகரையும்,அங்குள்ள போலீஸ் தலைமை அலுவலகமும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகளும், அமெரிக்கப் படைகளும் வெளியேறத் தொடங்கியபின் தலிபான்கள் வேகமாக பல்வேறு மாகாணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். தலிபான்களுக்கும், ஆப்கன் ராணுவத்துக்கும் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
தலிபான்கள் அட்டூழியத்தைப் பொறுக்க முடியாமல், பேச்சுவார்த்தைக்கு ஆப்கான் அரசு முன்வந்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் கத்தார் நாட்டை மத்தியஸ்தராக முன்வைத்து தலிபான்களுடன் பேச்சு நடத்த ஆப்கன் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவும் ஆப்கன் அரசு தயாராகி வருகிறது.
அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.அதன்பின், புதிய அதிபராக வந்த ஜோ பைடன் இந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி, அமெரிக்கப் படைகளும், நேட்டோ படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பகுதி வெளியேறிவிட்டனர்.
இதனால் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள். கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.