Last Updated : 04 Feb, 2016 05:03 PM

 

Published : 04 Feb 2016 05:03 PM
Last Updated : 04 Feb 2016 05:03 PM

ஜிகா பாதித்த குழந்தை பக்கெட்டுக்குள் உட்கார்ந்திருப்பது ஏன்?- புகைப்பட நிருபரின் கனத்த பகிர்வு

ஊடகத்தில் வார்த்தைகளைவிட, விவாதங்களைவிட, பல நேரங்களில் புகைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் காலத்துக்கும் பேசப்படுவதாக அமைந்துவிடுகிறது.

அப்படித்தான் ஜிகா வைரஸ் பாதித்த குழந்தை ஒன்று பக்கெட்டில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் உலகளவில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் புகைப்படம் ஜிகா வைரஸ் தாக்கினால் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறப்பார்கள் என்பதை உள்ளபடியே உணர்த்துவதுடன் ஒரே கேள்வியை எல்லோரது மனதிலும் ஏற்படுத்துகிறது.

'குழந்தை ஏன் பக்கெட்டில் உட்காரவைக்கப்பட்டுள்ளது?' என்பதுதான் அந்தக் கேள்வி.

'பக்கெட் குழந்தை' குறித்து அந்த புகைப்படத்தை எடுத்த ஏ.பி. புகைப்பட கலைஞர் ஃபெலிப் டனா தனது அனுபங்களை பகிர்ந்துள்ளார்.

அவரது அனுபவ பகிர்வு:

கடந்த டிசம்பர் மாதம், வடகிழக்கு பிரேசிலில் கேருஆரு என்ற இடத்திலிருந்த ஒரு மருத்துவமனையில்தான் முதன் முதலில் நான் சொலாஞ் ஃபெரைராவைப் பார்த்தேன். அவருக்கு 38 வயதாகிறது.

கையில், சிறிய தலையுடன் உள்ள ஒரு குழந்தையை வைத்திருந்தார். அப்போதுதான் குழந்தையை அவர் மருத்துவரிடம் காட்டிவிட்டு வந்திருக்க வேண்டும். மருத்துவர் என்ன சொல்வாரோ என்ற பதற்றம் ஃபெரைராவின் முகத்தில் பிரதிபலித்தது.

அவரது பதற்றத்துக்கு காரணம், ஃபெரைராவின் கிராமத்தில் பலரும் அந்த சிறிய தலை குழந்தையைப் பற்றி பலவாறு பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ வினோத நோய் ஜோஸை பிடித்திருப்பதாக சொல்லியிருந்தனர்.

ஜோஸ், அதுதான் அக்குழந்தையின் பெயர். கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் அக்குழந்தை பிறந்திருந்தது. குழந்தை ஜோஸுக்கு ஜிகா பாதிப்பு இருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. ஜோஸின் தலை அவ்வளவு சிறியதாகவும், தட்டையாகவும் இருந்தது. இதுவே ஜிகா பாதிப்பின் அடையாளம் என படித்திருந்ததால் ஜோஸுக்கு அந்நோய் தாக்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு நான் வந்திருந்தேன்.

(மருத்துவர் மீண்டும் ஃபெரைராவை அழைக்கிறார் ) பதற்றத்துடனேயே உள்ளே சென்ற அவர் குழந்தையை கையில் அரவணைத்தபடியே வெளியே வந்தார். நான் அவர் முன் நின்றிருந்தேன். என்னிடம் விவரத்தைச் சொன்னார். ஆனால், அவர் அழவில்லை, மாறாக அதிர்ச்சியடைந்திருந்தார். அவரை தேற்றிவிடலாம் என்றே தோன்றியது. குழந்தை ஜோஸை ஒரு புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். தொலைபேசி எண்ணைத் தந்தார். அடுத்தநாள் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றார்.

ஃபெரைரா என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். இந்த நோய் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று? நான் எதுவுமே சொல்லவில்லை. ஜோஸ் நலமுடன் இருப்பான் என்ற அவரது நம்பிக்கையை சற்றும் குலைக்க நான் விரும்பவில்லை.

மறுநாள் போகோ பண்டோவில் உள்ள ஃபெரைராவின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டில் குழந்தை ஜோஸ் வீறிட்டு அழுது கொண்டிருக்க அதை சமாளிக்க முடியாமல் ஃபெரைரா திணறிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு உணவு ஊட்ட முடியவில்லை. நரம்பியல் நோய் பாதித்த குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல் மிகக் கடினம் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஜோஸின் கதறல் இன்னமும் அதிகரித்திருந்தது. அப்போது ஃபெரைரா வேகமாகச் சென்று ஒரு பக்கெட்டை எடுத்துவந்து அதற்குள் குழந்தையை உட்கார வைத்தார். சில நிமிடங்களில் குழந்தை சமாதானம் அடைந்தது. குழந்தை கட்டுக்கடங்காமல் அழுதால் அவ்வாறு செய்யுமாறு நர்ஸ் கூறியது மிகவும் நல்ல யோசனை என்றார் ஃபெரைரா.

குழந்தையை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

அன்றிரவு குழந்தை ஜோஸ் புகைப்படத்தை எடிட் செய்தேன். அது எனக்கு வழக்கமான பணியாக இல்லை. குழந்தை ஜோஸின் வேதனையை பலரும் படம் பிடித்திருந்தனர். ஆனால், எனக்கு அது வெறும் புகைப்படமாக மட்டும் தோன்றவில்லை. செய்தி வெளிச்சத்தையும் தாண்டி அப்புகைப்படத்தில் என்னை ஏதோ வெகுவாக பாதித்தது. என்னை மட்டுமல்ல உலகம் முழுதும் பலரும் ஜோஸ் புகைப்படத்தைக் கண்டு நெகிழ்ந்திருப்பதாகவே நினைக்கிறேன். அதனால், மீண்டும் ஒரு முறை ஜோஸைப் பார்க்க கிளம்பினேன்.

இப்போது ஃபெரைரா போகோ பண்டாவில் இல்லை. அவர் பெனிடோ எனும் இடத்துக்கு பெயர்ந்துள்ளார். பெனிடோவில் கொசுத் தொல்லை குறைவாம் அது மட்டும் அல்லாமல் குழந்தைக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனை உள்ள இடமும் அங்கிருந்து சற்று அருகாமையிலேயே இருக்கிறதாம். "நாங்கள் போகோ பண்டாவில் இல்லாமல் இருந்திருந்தால் என் குழந்தைக்கு இப்படி ஆகியிருக்காது" என்றார். ஆனால், எனக்கு என்னவோ பெனிடோவிலும் கொசுக்கள் அதிகமாக இருந்தது போலவே தோன்றிற்று.

ஜோஸைப் பார்த்தேன். குழந்தை மெலிந்து போயிருந்தது. ஒரு கண் வெளியே துருத்திக் கொண்டிருப்பதுபோல் இருந்தது.

ஃபெரைரா குறுக்கிட்டார், "எனக்கு பயமாக இருக்கிறது. ஒருவேளை ஜோஸுக்கு பார்வை தெரியாமல் போய்விடுமோ, அவன் முடங்கிவிடுவானோ என்றெல்லாம் அச்சம் எழுகிறது. குழந்தை 2 கிலோ எடை குறைந்துவிட்டது" என்றார்.

என் குழந்தை மற்ற குழந்தைகள் போல் ஓடி விளையாடாது என்று எண்ணும்போதே... (ஃபெரைரா கதறி அழுகிறார்).

நான் அங்கிருந்து புறப்பட்டேன். அப்போது அண்டை வீட்டு சிறு குழந்தை உள்ளே நுழைந்தது. ஃபெரைரா அக்குழந்தையை பார்த்து மவுனமாக புன்னகைத்தார்.

பின்னர் என்னை பார்த்தார். ஏதோ சொல்ல வந்து ஒரு சிறு அமைதிக்குப் பின், "பாருங்கள், மற்ற குழந்தைகளுக்கெல்லாம் தலை எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று. என் ஜோஸ் தலைதான் இயல்பான அளவில் இருக்கிறது" என்றார் விளையாட்டும் வெதும்பலும் கலந்து.

தமிழில்:பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x