Published : 11 Aug 2021 03:54 PM
Last Updated : 11 Aug 2021 03:54 PM

தலிபான்களிடம் சரணடையும் ஆப்கன் ராணுவ வீரர்கள்; அச்சுறுத்தல் நிறைந்த பகுதிக்கே நேரில் சென்ற அதிபர் 

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தலிபான்களிடம் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சரணடைந்தனர்.

வீரர்கள் பின்வாங்காமல் உத்வேகத்துடன் போரிட ஊக்குவிக்கும் வகையில் அதிபர் அஷ்ரஃப் கனி மஷார் இ ஷரீஃப் பகுதிக்கு நேரில் சென்றுள்ள நிலையில் அதற்கு சற்று முன்னதாக ராணுவ வீரர்கள் பெருமளவில் சரணடைந்துள்ளனர்.

ராணுவ அதிகாரியின் வேதனை சாட்சி:

தலிபான்களிடம் சரணடைந்த பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "குண்டூஸ் விமானநிலையத்தின் அருகே தலிபான்கள் தொடர்ச்சியாக பீரங்கிக்குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். எங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் சரணடைந்தோம். ஏற்கெனவே நூற்றுக்கணக்கான வீரர்கள் சரணடைந்துவிட்டனர். இப்போது நாங்கள் அனைவருமே மன்னிப்புக்காகக் காத்திருக்கிறோம்" என்று வேதனையுடன் கூறினார்.

தலிபான்கள் வசம் 9 மாகாணங்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறுகிய காலத்தில் 9 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். குண்டூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா உள்ளிட்ட 9 மாகாணங்களை தலிபான்கள் வசம் சென்றுவிட்டது.

உள்ளூர் கமாண்டோக்களுடன் அதிபர் பேச்சுவார்த்தை:

அடுத்ததாக மஷார் இ ஷரீஃப் பகுதியைக் குறிவைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதிக்குச் சென்றுள்ளார் அதிபர் அஷ்ரஃப் கனி.
மஷார் இ ஷெரீஃப் வந்துள்ள அதிபர் கனி, அங்கு உள்ளூரில் தலிபான்களை எதிர்ப்பதில் வலுவானவராக உள்ள அட்ட மொகமது நூர் மற்றும் அப்துல் ரஷீத் தோஸ்தும் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மஷாரை மட்டும் ஆப்கானிஸ்தான் இழந்துவிட்டால் அது அரசாங்கத்துக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால், உள்ளூர் படைகளைக் கொண்டாவது தலிபான்களை ஒடுக்க அந்நாடு முயற்சி செய்துவருகிறது.

மஷார் நகருக்கு விரைந்த அப்துல் ரஷீத் தோஸ்தும், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தலிபான் களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். 2001ல் ஆயிரக்கணக்கான தலிபான்களை அமெரிக்கப் படைகளுடன் இணைந்து கொன்றவர் அப்துல் ரஷீத் தோஸ்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x