

ஆப்கனில் இருந்து தங்கள் நாட்டுப் படைகள் வெளியேறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, இது அவர்கள் போராட்டம் என்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்களை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, “அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும்போது தலிபான்கள் இவ்வாறான தாக்குதலை நடத்துவார்கள் என்பது முன்பே அறிந்ததுதான். இது ஆப்கன் அரசின் போராட்டம். அவர்கள்தான் அவர்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். எனினும் தொடர்ந்து நாங்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்குப் பயிற்சிகளைக் கொடுப்போம்” என்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். கடந்த வாரம் ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் நசார் முகமத் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவங்கள் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இளம்பெண் ஒருவரைத் தலிபான்கள் கொலை செய்தனர். மேலும், ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவர் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு இளம்பெண் தலிபான்களால் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருவதால், ஆப்கன் மீதும், பொதுமக்கள் மீதும் தலிபான்கள் தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.