Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM
ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்குகின்றன. அந்த வகையில் இந்த மாதம் இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதன்படி இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பெரும்பாலான நாடுகள் தலிபான்களின் வன்முறையை சுட்டிக் காட்டினர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவுன்சிலின் தலைவர் திருமூர்த்தி கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்த நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் மோசமான விளைவுகளை சந்தித்து வருகின்றனர். அவர்களை காப்பாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT