

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது குடிமக்களை வெளியேறுமாறு பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. எனவே பிரிட்டன் குடிமக்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். கடந்த வாரம் ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் நசார் முகமத் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவங்கள் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இளம்பெண் ஒருவரை தலிபான்கள் கொலை செய்தனர். மேலும், ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவர் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருவதால், ஆப்கன் மீதும் பொதுமக்கள் மீதும் தலிபான்கள் தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றனர்.
பின்னணி:
2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.
தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.