Published : 03 Feb 2016 10:51 AM
Last Updated : 03 Feb 2016 10:51 AM

உலக மசாலா: அர்ப்பணிப்புக்குத் தலை வணங்குகிறோம்!

வாஷிங்டனில் கடந்த வாரம் இறந்து போனார் ‘கோன்னி’ என்று அழைக்கப்படும் Concepcion Picciotto. உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 35 வருடங்களாக வெள்ளை மாளிகை வாசலில் நின்று போராடி வந்தவர். அமெரிக்காவில் இவரைத் தெரியாதவர்களே கிடையாது. ஸ்பெயினில் பிறந்த கோன்னி, பாட்டியால் வளர்க்கப்பட்டார். 1960-ம் ஆண்டு நியூயார்க் வந்து சேர்ந்தார். ஸ்பெயின் நாட்டு அலுவலகத்தில் வேலை செய்தார். இத்தாலியரைத் திருமணம் செய்துகொண்டார். ஓக்லா என்ற பெண்ணைத் தத்தெடுத்துக் கொண்டார். கணவர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது இருவருக்கும் பிரச்சினை வந்துவிட்டது.

கோன்னியை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டார் அவரது கணவர். குழந்தையையும் இழந்து விட்டார் கோன்னி. பிரச்சினைகள் முடிந்து வெளியே வந்தபோது, அநியாயத்தைக் கண்டு போராட வேண்டும் என்று முடிவெடுத்தார். 1981-ம் ஆண்டு அணு எதிர்ப்புப் போராட்டத்தைக் கையில் எடுத்தார். சில மாதங்களில் வில்லியம் தாமஸ் என்ற போராட்டக்காரரும் சேர்ந்துகொண்டார். வெள்ளை மாளிகைக்கு வெளியே சிறிய கூடாரம் அமைத்து தினமும் போராடி வந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் இறந்து போனார். கோன்னி தனியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். பல முறை அதிகார மட்டத்தில் இருந்து தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறார். தன் வாழ்நாளில் 90 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார்.

பாதுகாப்புக்காகத் தலையில் ஹெல்மெட் அணிந்திருப்பார். கூடாரத்தை விட்டு ஓர் இரவு வெளியே சென்றாலும் காவலர்கள் கூடாரத்தை அப்புறப்படுத்தி விடுவார்கள். மீண்டும் கூடாரம் போடுவார். வெயில், பனி, மழை எதையும் பொருட்படுத்தியதில்லை. ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா என்று பல அதிபர்களின் ஆட்சியில் உலக அமைதியை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தியிருக்கிறார். ஆனால் ஒருவர் கூட இவரிடம் வந்து பேசியதில்லை. அமெரிக்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோன்னியைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.

மைக்கேல் மூர் ஆவணப்படத்தில் கோன்னி இடம்பெற்றுள்ளார். உலகம் முழுவதும் அணு ஆயுதங்களைக் குறைக்க எடுத்து வரும் நடவடிக்கைகளில் கோன்னியின் போராட்டத்துக்கும் ஒரு பங்கு உண்டு. சிலர் கோன்னியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொன்னாலும், பெரும்பாலானவர்கள் அவரை ஒரு ஹீரோவாகக் கருதுகிறார்கள். அமெரிக்க வரலாற்றிலேயே அதிகக் காலம் போராடிய 80 வயது கோன்னி, கடந்த வாரம் தன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். ஏராளமான பொதுமக்கள் அவரது கூடாரத்தில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். வெள்ளை மாளிகையில் இருந்தும் இரங்கல் குறிப்பு வெளியிடப்பட்டது.

தங்களின் அர்ப்பணிப்புக்குத் தலை வணங்குகிறோம் அம்மா!

பெட் காபி என்ற பெயரில் சிலர் தூங்கி விழித்ததும் காபி குடிப்பார்கள். பல் தேய்க்கும் விஷயத்தையும் காபியையும் இணைத்து ‘பவர் எனர்ஜி’ என்ற பெயரில் புதிய பற்பசையை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டான் மெரொபோல்.

‘‘உலகிலேயே முதல் முறை உருவாக்கப்பட்ட காபி கலந்த பற்பசை இதுதான். காலை எழுந்தவுடன் பற்பசை கொண்டு பல் துலக்கினால் காபி குடித்த திருப்தியும் கிடைக்கும். பற்களும் சுத்தமாகிவிடும். 50 சதவீத அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் பல் துலக்குகிறார்கள். எல்லோரையும் பற்கள் மீது கவனம் செலுத்த வைப்பதற்காக ஒரு விஷயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். காபி கலந்த பற்பசையை உருவாக்கினேன். வாயில் பற்பசை பட்டவுடன் காபி குடித்த புத்துணர்வு கிடைக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் பற்பசையைப் பயன்படுத்தலாம்’’ என்கிறார் டான்.

‘‘பவர் எனர்ஜி உண்மையிலேயே மிகச் சிறந்ததாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை முடித்து விட முடிகிறது. பற்களும் ஆரோக்கியமாக இருக்கிறது. காபிக்குச் செலவு செய்யும் பணமும் மிச்சமாகிறது’’ என்கிறார் ரேச்சல் பிக். பவர் எனர்ஜியில் ஃப்ளூரைட் கிடையாது. அதனால் இது மருந்து வகையில் வராது. பல் மருத்துவர்களும் பவர் எனர்ஜியை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால் பற்பசையைப் பயன்படுத்திய பிறகு வாயைச் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். பற்பசை வெளிவந்த மூன்று நாட்களில் 35 சதவீதம் பேர் இதைப் பயன்படுத்திவிட்டனர். மேலும் விற்பனை அதிகரிக்கும் என்கிறார்கள்.

ஆவி பறக்க காபி குடிக்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x