

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே தொடங்கியுள்ள பேச்சு வார்த்தையை வரவேற்பதாகவும், தேவைப் பட்டால் பேச்சுவார்த்தை யின் போது இரு நாடுகளுக்கும் தன்னுடைய உதவியை அளிக்கத்தயார் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
கடந்த மாதம் மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அடுத்த நாள் மோடியும், ஷெரீபும் சந்தித்து உரையாடினர். இவர்களின் உரையாடலை வரவேற்றுள்ள அமெரிக்கா, இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது.
"இந்தியா பாகிஸ்தானுக்கிடை யேயான பேச்சுவார்த்தையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இரு நாடுகளுக்கிடையே அமைதி நிலவச் செய்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தை முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம்" என அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.
மேலும், "மோடி எப்போது அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்பது குறித்து சரியான தேதி இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. இதுகுறித்து இந்திய அதிகாரிகளுடனும் நாங்கள் கலந்தாலோசித்து வருகிறோம்" என்றார்.
திங்கள்கிழமை கராச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து அவர் கூறும் போது, "அந்த நிகழ்வு குறித்து விசாரணை மேற்கொள்ள எங்கள் சார்பாக துப்பறிதல் மற்றும் தடயவியல் துறை சார்ந்த உதவிகளை பாகிஸ்தானுக்கு வழங்கி யிருக்கிறோம். அந்த உதவியை ஏற்பது அல்லது நிராகரிப்பது பற்றி பாகிஸ்தானிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மேலும், சர்வதேச தீவிரவாத அமைப்பான தெரிக் இ தாலிபான் பாகிஸ்தான் எனும் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு பாகிஸ்தானுடன் நாங்கள் கைகோர்த்துள்ளோம்" என்றார்.