

ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவர் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு ஊடக மையத்தின் இயக்குநராக இருந்து வந்தவர் தவா கான் மேனாபால். இவர் அரசாங்க செய்திக் குறிப்புகளை உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார். இந்நிலையில் அவரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், "மேனாபாலை நாங்கள் தான் சுட்டுக் கொன்றோம். அவர் எங்களுக்கு எதிராக அரசு வெளியிடும் செய்திகளை ஊடகங்களுக்குக் கொண்டு சேர்த்தார். அவருடைய செய்கைக்காக அவரை தண்டித்துள்ளோம்" என்று கூறினார். இருப்பினும், இந்தப் படுகொலை குறித்து மேலதிக விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
டேனிஷ் சித்திக் உயிரிழப்பு:
அண்மையில் தான், ஆப்கானிஸ்தானில் தலிபான் - பாதுகாப்புப் படைகள் இடையே நடந்த சண்டையில் இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் (ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்) உயிரிழந்தார்.
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அரசு சார் கட்டிடங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் - தலிபான்கள் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் ஆப்கன் படைகளுடன் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் பிரபல இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் கந்தஹாரில் ஆப்கன் படைகள் - தலிபான்களுக்கு இடையே நடந்த மோதலில் டேனிஷ் உயிரிழந்தார்.
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருதைப் பெற்றவர் டேனிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான தேசமாக இருக்கிறது.