

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் டெல்டா வைரஸ் இதுவரை 135 நாடுகளில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் இதுவரை 132 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 40 லட்சம் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மேற்கு பசிபிக் பகுதிகளில் மட்டும் 33%க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளில் 37%க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவில் 9% பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் உலக அளவில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சம் பேருக்கும், இந்தியா, இந்தோனேசியாவில் 2 லட்சம் பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.