

பிரஸ்ஸல்ஸ் நகரில் புதன்கிழமை நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில், உக்ரைன் சிக்கலுக்கு தீர்வு காண ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் ஒத்துழைப்பு அவசியம் என அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பிற தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே, ஜி 7 மாநாட்டில் பங்கேற்க தனக்கு அழைப்பு வராததை பெரிதுபடுத்தாத புதின், பேச்சு வார்த்தைக்கு இப்போதும் தான் தயார் என்பதை உறுதிபடத் தெரிவித்தார்.
ஜி7 மாநாடு தொடர்பாக பிரான்ஸ் அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்தே கூறியதாவது: இந்த மாநாட்டில் உக்ரைனில் ஸ்திரத்தன்மை ஏற்பட ரஷ்யா ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வலியுறுத்தியதன் மூலம் ஒற்றுமைக்கான அடையாளம் வெளிப்பட்டது. அதே நேரத்தில் ரஷ்யா மீது புதிய தடை விதிக்கப்பதற்கான திட்டமும் பரிசீலிக்கப்பட்டது என்றார்.
உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை ரஷ்யா அங்கீகரித்து உக்ரைன் எல்லையில் நிறுத்தியுள்ள தமது படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கையை நிறைவு செய்யவேண்டும் என ரஷ்யாவுக்கு அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.
தேவைப்பட்டால் ரஷ்யா மீதான தடைகளை தீவிரப்படுத்தவும் பரிசீலிப்போம் என்றும் ஜி 7 தலைவர்கள் எச்சரித்தனர். அதேவேளையில், உக்ரைனில் முழு அளவில் ஆக்கிரமிப்பு செய்யாமல் தனது படைகளை வாபஸ் பெற தொடங்கியுள்ளது ரஷ்யா. இதனால் புதினுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திட அமெரிக்காவின் நட்பு நாடுகள் முன்வந்துள்ளன.
ஹொலாந்த், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் பிரதமர் மெர்க்கல் ஆகியோர் புதினுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். புதினுடன் பேசுவதற்கு ஒபாமா தயாராக இல்லை. உக்ரைனில் உள்ள கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்காக பதிலடியாக அமெரிக்காவும் அதன் முக்கிய நட்பு நாடுகளும் மார்ச்சில் ஜி 8 அமைப்பிலிருந்து ரஷ்யாவை விலக்கின.