

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் பரவும் காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன.
இதுகுறித்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், “ஏதென்ஸில் பரவும் காட்டுத் தீ ஆபத்தாக உள்ளது. மேலும், அங்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. காட்டுப் பகுதியில் பரவிய தீ மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன.
பலரது வீடுகள் காட்டுத் தீயால் சேதம் அடைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 81 இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. 500க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீயால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.