

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விட அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1800 கோடி டாலராக உள்ளது. ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 150 ரூபாய் என்ற அளவில் சரிந்தது.
பாகிஸ்தானில், டொயோட்டா கார் உற்பத்தி ஆலை, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே உட்பட பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோர்க்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சர்வதேச நிதியமான கடன் வாங்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் தருவதாக ஒப்புக் கொண்ட 600 கோடி டாலரைக்தருவதற்கு ஐஎம்எப் தயக்கம் காட்டியது. பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பணம் திரட்டவும் புதிய திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.பாகிஸ்தான் மக்கள் வரி கட்டாததால் நாடு பெரும் நெருக்கடியை நோக்கி செல்கிறது, ஜூன் 30-ம் தேதிக்குள் தங்கள் சொந்துக் கணக்குகளை வெளியிட வேண்டும் என அறிவித்தார்.
அமெரிக்கா சென்ற இம்ரான் கான் சொகுசு ஓட்டலில் தங்காமல் தங்கள் நாட்டு தூதரகத்தின் விருந்தினர் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும் அறையில் தங்கி சிக்கனத்தை வெளிப்படுத்தினார்.
பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு இல்லம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் அதனை வாடகைக்கு விட்டு பணம் ஈட்டும் முயற்சியாக இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது.