

இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் வழியாகச் செல்லும் டிரான்சிட் பயணத்துக்கான தடை நாளை (5-ம் தேதி) முதல் நீக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியவுடன் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு தெற்காசிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்தை ஐக்கிய அரபு அமீரகம் தடை செய்தது. இந்நிலையில் கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருவதையடுத்து, மீண்டும் டிரான்சிட் விமானப் போக்குவரத்தைத் தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஆனால், அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக வேறு நாட்டுக்குச் செல்லும் டிரான்சிட் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வரும் பயணிகள் பயண நேரத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதன் பின்புதான் பயணிகள் இறுதியாகச் செல்லும் இடத்துக்கான அனுமதி வழங்கப்படும். டிரான்சிட் மூலம் செல்லும் பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்களில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நேபாளம், இலங்கை, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தும், டிரான்சிட் அனுமதியும் இல்லை. அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள், வசிப்பவர்கள் இந்த நாடுகளில் இருந்து வந்தால், அதற்குரிய ஆவணங்கள் இருந்தால் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வருவோர் கண்டிப்பாக முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
இந்த நாடுகளில் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் பயண நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.
அதேசமயம், மருத்துவம், கல்வி, மர்றும் அரசுத்துறை, மருத்துவ சிகிச்சையை நிறைவு செய்யவருவோர், படிப்பை நிறைவு செய்ய வருவோருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதிலிருந்து மனிதநேய அடிப்படையில் விலக்கு அளிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.