

சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க குடியரசுக் கட்சி இது தொடர்பான அறிக்கையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
குடியரசுக் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்துதான் கரோனா வைரஸ் வெளியாகி இருப்பதை எங்களுக்குக் கிடைத்த தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. செப்டம்பர் 12, 2019க்கு முன்பே கரோனா வைரஸ் சீனா ஆய்வகத்திலிருந்து வெளியாகி இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழுவினர் சென்று ஆய்வு நடத்த வேண்டும், கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது, அதன் மூலாதாரம் என்ன, ஆய்வகங்களில் இருந்து பரவியதா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து உலக சுகாதார அமைப்பு, சீனாவில் ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆனால், சீனாவில் ஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தொடக்கத்தில் மறுத்துவிட்டது. பின்னர் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் சீனா சென்று ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் சீனாவின் ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அமெரிக்கா தொடர்ந்து சீனாதான் கரோனா வைரஸைப் பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.