

இலங்கை போர்க்குற்றம் தொடர் பான ஐ.நா. சபை தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய குழுவே விசாரணை நடத்தும் என்றும் விசாரணை யின்போது ராணுவ வீரர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் அதிபர் மைத்ரிபால சிறிசேனா அண்மையில் அறிவித்தார்.
இந்நிலையில் போர்க்குற்ற விசாரணை குறித்து ஆய்வு செய் வதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்ட் ராட் அல் உசேன் கடந்த 6-ம் தேதி கொழும்பு சென்றார். அங்கு வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நசீர் அகமது மற்றும் பவுத்த மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் நேற்று அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜெய்டிடம் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
மேலும் காணாமல் போனவர்களின் நிலை, அரசியல் கைதிகளின் விடுதலை, ராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஜெய்ட் முன்வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை ஜெய்ட் சந்தித்துப் பேசினார். அப்போது போர்க்குற்ற விசாரணை யில் ஐ.நா. தீர்மானத்தை நிறை வேற்ற இரு தலைவர்களிடமும் ஜெய்ட் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ராணுவ வசம் உள்ள நிலங்களை தமிழர்களுக்கு திருப்பி அளிக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். அரசியல் கைதிகளை விடுவிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மட்டுமன்றி மலையக தமிழர்களின் உரிமை களையும் பாதுகாக்க வேண்டும்.
போரில் காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு உதவுவதில் அரசு தவறியுள்ளது. அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை முறையாக நிறைவேற்ற வேண்டும். அண்மையில் நடந்த சுதந்திர தினத்தின்போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது மகிழ்ச்சி யளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.