திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு
Updated on: 
1 min read

திபெத் பகுதியில் உள்ள நாக்சு நகரின் பாகென் கவுண்டி பகுதியில் வியாழக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.  

இந்த நிலநடுக்கத்தின் மையம் வடக்கு அட்சரேகை 32.40 டிகிரியும், கிழக்கு தீர்க்கரேகை 93.79 டிகிரியும் சந்திக்கும் பகுதியில் பதிவாகியுள்ளது. மேலும், பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில்தான் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகளோ அல்லது பெருமளவிலான பொருள் சேதாரங்களோ குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், சேத விவரங்களைச் சேகரிக்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொலைதூர கிராமப் பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

யுரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகள் மோதும் பகுதியில் அமைந்திருப்பதால், திபெத்திய பீடபூமி தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயகரமான புவியியல் மண்டலமாக நீண்ட காலமாக அறியப்படுகிறது. இந்தப் பகுதியில் தட்டுகள் ஒன்றுக்கொன்று பெரும் விசையுடன் தொடர்ந்து மோதுவதால் இதுபோன்ற நிலநடுக்கங்கள் அவ்வப்போது நிகழ்வது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிலநடுக்க அபாயம் உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு
வானிலை அலர்ட்: நீலகிரி, கோவை, குமரியில் மிக கனமழை, சென்னை + 25 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in