Last Updated : 03 Feb, 2016 10:44 AM

 

Published : 03 Feb 2016 10:44 AM
Last Updated : 03 Feb 2016 10:44 AM

செம்மை காணுமா செர்பியா? - 2

செர்பியா குறித்த இந்தத் தொடரில் ஸ்லாவ் என்ற இனத்தைப் பற்றியும் அவ்வப்போது குறிப்பிட நேரலாம். யுகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த நாடு செர்பியா. யுகோஸ்லாவியா என்பதே ‘ஸ்லாவ்’ என்ற இனப் பெயரை அடிப்படையாகக் கொண்டதுதான்.

இஸ்லாமியர்கள் பல நாடுகளில் வசிக்கிறார்கள் அல்லவா? அதுபோலவே ஸ்லாவ் இனத்தவரும் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா, பால்கன் பகுதி, மத்திய மற்றும் வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் படர்ந்து இருக்கிறார்கள்.

இப்போது ஐரோப்பாவில் வாழும் இந்தோ-ஐரோப்பிய இனத்தவர்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் இவர்கள்தான். பத்தாம் நூற்றாண்டுவரை எதையும் எழுதி வைப்பது என்ற பழக்கமே ஸ்லாவ் இனத்தவரிடம் இருந்ததில்லை. எனவே இவர்கள் குறித்த சரித்திரம் முரண்பட்டிருக்கிறது. ரோமானியர்கள் இவர்களை காட்டு மிராண்டித்தனமான நாடோடிகள் என்று குறிப்பிட்டாலும் அப்படியெல்லாம் இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு கூறும் வரலாற்று ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் ஸ்லாவ் இனத்தவர் பெருமளவில் பால்கன் பகுதியில் குடியேறி இருந்தார்கள். ( பால்கன் என்பது ஒரு தீபகற்பம். தென்கிழக்கு ஐரோப்பாவில் இருக்கிறது. அங்கு பால்கன் மலை படர்ந்திருப்பதால் அந்த தீபகற்பத்துக்கே இந்தப் பெயர் வந்து விட்டது).

1945-ல் உருவானது யுகோஸ்லாவியா. முழுமையான பெயர் யுகோஸ்லாவிய சோஷலிசக் குடியரசு. இதில் மொத்தம் 6 குடியரசுகள். அவை செர்பியா, மான்டே னேக்ரோ, ஸ்லோவேனியா, க்ரோவேஷியா, போஸ்னியா மற்றும் மாசிடோனியா (போஸ்னியாவின் முழுப்பெயர் போஸ்னிய - ஹெர்ஜகோவினா. ஒரு வசதிக்காக இதை போஸ்னியா என்றே குறிப்பிடுவோம்).

அதற்கு முன் இவை தனித்தனி நாடு களாக இருந்தன. ஸ்லோவேனியா நெடுங் காலத்துக்கு ஆஸ்திரியாவின் பிடியில் இருந்தது.

குரோவேஷியா பதினோராம் நூற்றாண் டில் ஹங்கேரியின் பிடிக்குச் சென்றது. முதலாம் உலகப்போர் முடியும் வரை ஹங்கேரியின் வசம்தான் இருந்தது.

தனி நாடாகவே இருந்த போஸ்னியா பதினைந்தாம் நூற்றாண்டில் துருக்கியரின் ஆட்சிக்கு உள்ளானது. பின்னர் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளின் வசம் சென்றது.

பதினான்காம் நூற்றாண்டில் மாசிடோனி யாவை செர்பியா வென்று தன் வசம் சுவீகரித்தது. பின்னர் செர்பியாவோடு சேர்ந்து அதுவும் துருக்கியர் ஆளுகைக்குச் சென்றது.

பின்னர் பால்கன் யுத்தம் என்று அழைக் கப்பட்ட போரில் செர்பியா வென்றது. அங்கு ஒரு தனி ஆட்சி பதிமூன்றாம் நூற்றாண்டிலி ருந்து நடக்கத் தொடங்கியது. அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. என்றாலும் 1389-ல் துருக்கியரிடம் செர்பியா தோற்றது. 1459 வரை துருக்கியர்கள் வசம்தான் செர்பியா இருந்தது.

ஒட்டாமன் (துருக்கியர்) சாம்ராஜ்யம் பின்பு வலுவிழக்க, செர்பியாவுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கினார்கள் துருக்கியர்கள். ஐரோப்பிய நாடுகள் செர்பியாவை தனி நாடாக ஏற்றுக் கொண்டன.

இந்த நிலையில்தான் தன் காதல் மனைவியுடன் ஒரு டூர் சென்று வரலாம் என்று தீர்மானித்தார் ஆஸ்திரிய நாட்டு இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட்.

முதலாம் உலகப் போருக்கு வித்திட்டது அந்தப் பயணம்.

மனைவியுடன் டூர் செல்வது தப்பே இல்லை. ஆனால் அவர் தன் உலாவுக்குத் தேர்ந்தெடுத்த இடம்தான் சரியில்லை. அது போஸ்னியா. போஸ்னியாவை 1908-ல் ஆஸ்திரியா-ஹங்கேரி தங்கள் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவந்திருந்தன.

''வேண்டாம். போஸ்னியாவுக்குப் போகாதீர்கள். ரொம்ப அபாயம்'' என்று இளவரசரை எச்சரித்தார்கள் சிலர். ரிஸ்க் எடுக்கிறோம் என்பது இளவரசருக்கும் நன்றாகத் தெரியும். என்றாலும் தன் முடிவை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

என்ன ரிஸ்க் என்கிறீர்களா? போஸ்னி யாவில் உள்ள மக்களில் நிறைய பேருக்கு - முக்கியமாக செர்ப் பிரிவினருக்கு - ஆஸ்திரியாவின் அதிகாரத்தில் தங்கள் நாடு இருப்பது பிடிக்கவில்லை. அவர்களிடமி ருந்து விடுதலை பெற வேண்டும். பக்கத்தி லுள்ள செர்பியாவோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை.

செர்பியாவில் அப்போது 'கருப்புக்கை' என்ற ஓர் இயக்கம் இருந்தது. செர்பியாவை மேலும் மேலும் விரிவாக்க வேண்டும். அதில் போஸ்னியாவையும் சேர்க்க வேண்டும் என்பது அந்த இயக்கத்தின் ஆசை. ஆகவே ஆஸ்திரியாவைத் தங்கள் எதிரியாக நினைத்தார்கள்.

கருப்புக்கை இயக்கத்தில் அப்போது 2,500 உறுப்பினர்கள் இருந்தார்கள். ராணுவ அதிகாரிகள் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் இதில் உண்டு. இவர்களில் முப்பது பேர் போஸ்னியாவில் வசித்தவர்கள்.

1911-ல் பிரான்ஸ் ஜோசப் எனும் ஆஸ்திரிய சக்ரவர்த்தியைக் கொலை செய்ய ஒருவரை அனுப்பினார் கருப்புக்கை இயக்கத்தின் தலைவர். சில வருடங்களுக்குப் பிறகு போஸ்னியா - ஹெர்செகோவ் மாகாணங்களின் (ஆஸ்திரிய) கவர்னரை கொலை செய்யவும் ஒரு சதி செய்தார்கள். இரண்டிலும் தோல்வி.

இப்போது ஆஸ்திரிய இளவரசர் போஸ்னி யாவுக்கு வரப்போகிறார் என்றதும் “கருப்புக்கை”யின் தளபதிகள் ஆலோசனை நடத்தினார்கள். போஸ்னியாவுக்குள் அடியெ டுத்து வைக்கும் இளவரசரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. போஸ்னி யாவும் செர்பியாவும் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார் இளவரசர். அடுத்ததாக இவரே அரசர் பதவிக்கும் வந்துவிட்டால் என்னாவது? ஆரம்பத்திலேயே இந்த சிக்கலை கிள்ளி எறிவது நல்லதுதானே.

(உலகம் உருளும்)



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x