Published : 31 Jul 2021 02:15 PM
Last Updated : 31 Jul 2021 02:15 PM

எத்தியோப்பியாவில் கடும் உணவுப் பஞ்சம்: 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு?

எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில், “ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.

இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. டைக்ரேவில் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பரிசோதனை செய்ததில் இருவரில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

டைக்ரேவில் சுமார் 4 லட்சம் மக்கள் பஞ்சத்தில் வாழ்கின்றனர். மேலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அவசர உணவுத் தேவையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக டைக்ரே பகுதியில் உள்ள இனக்குழுக்களிடம் மோதல் நிலவுகிறது.

முன்னதாக, 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது. அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவிவந்த ராணுவ ரீதியிலான சிக்கலைக் கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்குக் கொண்டுவந்தார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சொந்த நாட்டில் நிலவும் இனக்குழு பிரச்சினைகளை அபய் அகமதுவால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லையா? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x