

ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் என்று அறியப்படும் ஃபசல் முகமது, கடத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தது தலிபான் தீவிரவாதிகள் தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
ஃபசல் முமகது ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர். இவரைப் பிரியமாக மக்கள் காஸா ஸ்வான் என்றழைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை தலிபான் தீவிரவாதிகளே செய்திருக்க வேண்டும் என்று மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், தலிபான் தரப்பில் இல்லை என மறுக்கப்பட்டது.
இந்நிலையில், காஸா ஸ்வான், தலிபான் தீவிரவாதிகளால் அடித்துத் துன்புறத்தப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காஸா ஸ்வானின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்கிறது. முகத்தை மறைத்த தீவிரவாதி ஒருவர் நகைச்சுவை நடிகரின் கன்னத்தில் அறைகிறார். அந்த நடிகரோ செய்வதறியாது பயத்தில் மிரண்ட கண்களுடன் அமர்ந்திருக்கிறார். இந்த வீடியோவுடன் இன்னொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் தலிபான் தீவிரவாதிகள் சூழ காஸா ஸ்வானின் சடலம் கிடத்தப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு வீடியோக்களும் வெளியான நிலையில் தலிபான் இயக்கத்தினர் தாங்கள் தான் காஸாவை கொலை செய்தோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிபுல்லா முஜாகித், காஸா கான் நகைச்சுவை நடிகர் இல்லை. அவர் எங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். நாங்கள் கைது செய்தோம். அவர் தப்பிக்க முயன்றார். அதனால், அவரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். அவர் போலீஸில் தான் இருந்தார். அவரால் தலிபான்கள் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.
தலிபான் தீவிரவாதிகள் இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளுக்கும் எதிரானவர்கள். நகைச்சுவை மூலம் மக்களை மகிழ்விப்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்ற கொள்கை கொண்டவர்கள்.
இந்நிலையில், காமெடி நடிகரின் கொலையைக் கண்டித்து சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. இதுதொடர்பாக பேஸ்புக்கில் ஒருவர், தலிபான்கள் தான் காஸாவைக் கொலை செய்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. காஸாவின் அப்பாவி முகம் கண் முன்னே வந்து செல்கிறது. இந்த உலகிலேயே தலிபான்கள் மிகக் கொடூரமானவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.