

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவெடார் நாட்டு தூதரகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும், மூன்றரை ஆண்டு கால அவரது சட்டவிரோத காவலுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐ.நா. குழு கூறியுள்ளது.
அமெரிக்க ராணுவம் மற்றும் தூதரகத்தின் ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை அஸாஞ்சே தனது விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முயன்று வருகிறது. இந்நிலையில் அவர் லண்டனில் உள்ள ஈகுவெடார் நாட்டு தூதரகத்தில் அவர் கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சம் புகுந்தார்.
இதனிடையே ஸ்வீடனில் கடந்த 2010-ல் இரண்டு பெண்களை அஸாஞ்சே பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்நாட்டு அரசு 2012-ம் ஆண்டு குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை அஸாஞ்சே மறுத்துள்ளார்.
தூதரகத்தை விட்டு அஸாஞ்சே வெளியேறினால் லண்டன் போலீ ஸார் அவரை கைது செய்து ஸ்வீட னுக்கு நாடு கடத்துவர், பின்னர் ஸ்வீடன் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என அஸாஞ்சே அஞ்சுகிறார். இந்நிலையில் பிரிட்டன் போலீஸார் மீது ஐ.நா.வில் அஸாஞ்சே புகார் கூறியிருந்தார். இப்புகாரை சட்டவிரோத காவல் குறித்து ஆய்வு செய்யும் ஐ.நா. குழு விசாரித்தது.
இக்குழு அஸாஞ்சேவுக்கு சாதகமாக நேற்று தீர்ப்பு கூறியது. “ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் அரசுகளால் அஸாஞ்சே சட்டத்துக்கு புறம்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஈகுவெடார் தூதரகத்தில் இருந்து வெளியே செல்ல முடியாமல் அரை இருளில் அவர் இருந்து வருகிறார். இதற்காக ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் அரசுகளிடம் இருந்து நிவாரணம் பெறும் உரிமை அவருக்குள்ளது. அஸாஞ்சேவின் சட்டவிரோத காவல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். விரும்பிய இடத்துக்கு செல்லும் உரிமை மதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
ஐ.நா. குழுவின் தீர்ப்பு முன்னதாக அஸாஞ்சே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “எனக்கு எதிராக ஐ.நா. குழு தீர்ப்பு கூறினால் லண்டன் போலீஸாரிடம் சரண் அடைவேன். ஆனால் தீர்ப்பு எனக்கு ஆதரவாக இருந்தால் எனது பாஸ்போர்ட்டை கொடுப்பதுடன் என்னை கைது செய்யும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.
இந்நிலையில் ஐ.நா. குழுவின் தீர்ப்பு அஸாஞ்சேவுக்கு சாதகமாக இருந்தாலும் அவருக்கு எதிரான வழக்குகளில் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. ஐ.நா. குழுவின் தீர்ப்பு இந்நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்தாது என்றும் என்றாலும் இந்நாடுகளுக்கு இத்தீர்ப்பு தார்மீக நெருக்குதலை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.