

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நவாஸ் ஷெரீப் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 26-ம் தேதி மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீப், தாயகம் திரும்பியவுடன் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக தெரிவித்தார்.
கடித விபரம்:
"மிகுந்த திருப்தியுடன் நான் பாகிஸ்தான் திரும்பியுள்ளேன். நமது சந்திப்பின்போது பிராந்திய நலன் தொடர்பான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. எதிர்காலத்திலும், உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும். நமது முயற்சிகள் எதிர்கால நலனுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமையும். இந்தியா, பாகிஸ்தானில் உள்ள லட்சக்கணக்கான ஏழை மக்களின் நலனே பிரதானமானது.
நமது கூட்டு முயற்சியில் தான் இரு நாடுகளின் நலனும் அடங்கியிருக்கிறது என நம்புகிறேன்". இவ்வாறு நவாஸ் குறிப்பிட்டுள்ளார்.
நவாஸ் கடிதம், கடந்த ஓராண்டுகாலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற நிகழ்வுகளால் விரிசல் ஏற்பட்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் உறவை புதுப்பிக்கும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.