ஆப்கன் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு

ஆப்கன் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்துவரும் நிலையில், ஆப்கனில் நிலவும் பிரச்சினைகளுக்கு அமெரிக்காவே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன. தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறியது. இந்நிலையில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆப்கன் பிரச்சினை குறித்து அமெரிக்காவில் பிபிஎஸ் நியூஸ்ஹவர் என்ற பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் இம்ரான் கான், "ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைமைகு முழுக்க முழுக்க அமெரிக்கா தான் காரணம். 2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆட்கொண்டது. தலிபான் தீவிரவாதிகள் அல் கொய்தாவின் ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க மறுத்தது. ஆப்கன் படைகளுடன் இணைந்து தலிபான்களுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. ஆப்கன் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அமெரிக்க அதை கையில் எடுத்தது.

இப்போது அரசியல் தீர்வுக்கு தலிபான்கள் தயாராக இல்லை. தலிபான்கள் பாரம்பரிய பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்டம் தொடங்கியுள்ளது. இது தொடர்ந்தால், பாகிஸ்தானில் உள்ள பாஸ்தூன் இன மக்களும் தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்குவார்கள்" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in