இதுபோன்ற முட்டாள்தனமான கருத்தை நான் தெரிவித்திருக்கவே மாட்டேன்: இம்ரான் கான்

இதுபோன்ற முட்டாள்தனமான கருத்தை நான் தெரிவித்திருக்கவே மாட்டேன்: இம்ரான் கான்
Updated on
1 min read

பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் "இதுபோன்ற முட்டாள்தனமான கருத்தை நான் தெரிவித்திருக்கவே மாட்டேன்" என அவர் இன்னொரு பேட்டியில் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் ஹெச்பிஓ தொலைக்காட்சி நேர்காணலில் பாலியல் வன்முறை அதிகரிப்பு குறித்த கேள்விக்கு இம்ரான் கான் கூறும்போது, “பெண்கள் குறைவாக ஆடை அணிந்தால், அது ஆண்களை பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல. இது ஒரு பொதுவான அறிவு” என்று தெரிவித்தார்.

இம்ரான் கானின் இக்கருத்துக்கு பாகிஸ்தானின் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்ரான் கான் ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவர் என்று பலரும் விமர்சித்தனர். பாகிஸ்தானில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இம்ரான் கானுக்கு எதிராக குரல்கள் வலுத்தன.

இந்நிலையில், பிபிஎஸ் நியூஸ்ஹவர் என்ற அமெரிக்க ஊடக நிறுவனத்துக்கு அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "நான் யாருக்கு பேட்டி கொடுக்கிறேன். பேட்டியில் என்ன பேசுகிறேன் என்பதை தெரிந்தே செய்வேன். நான் ஒருபோதும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் தான் காரணம் என்ற முட்டாள்தனமான காரணத்தைச் சொல்லியிருக்கவே மாட்டேன். நான் கூறிய கருத்துகளை தவறாக திரிக்கக் கூறிவிட்டனர். பாகிஸ்தானில் அண்மைக்காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியே நான் பேசிக் கொண்டிருந்தேன். பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றும் நபர் தான் அந்தக் குற்றத்துக்கு முழு பொறுப்பாக இருக்க முடியும்.

பாலியல் வன்முறையில் பெண்கள் அணிந்திருக்கும் ஆடை பொருட்டல்ல. ஒரு பெண் எந்த மாதிரியான உடை அணிந்திருந்தாலும் சரி பலாத்காரம் நடந்தால் அதற்கு பலாத்காரம் செய்யும் நபர் தான் பொறுப்பாவார். ஒருபோதும் பாதிக்கப்பட்டவர் பொறுப்பாக மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் இஸ்லாமிய நாட்டின் தலைவர் என்பதால் பெண்கள் மீது அவருடைய பார்வையில் மத ஆதிக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நிச்சயமாக இல்லை. இஸ்லாம் பெண்களை மதிக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்துகிறது" என்று கூறினார்.

உலகிலேயே பாலின பேதத்தில் மோசமான 4 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in