ஆப்கனில் தொடரும் தலிபான்களின் அட்டூழியம்: பிரபல காமெடி நடிகர் சுட்டுக் கொலை

ஆப்கனில் தொடரும் தலிபான்களின் அட்டூழியம்: பிரபல காமெடி நடிகர் சுட்டுக் கொலை
Updated on
1 min read

ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் என்று அறியப்படும் நசார் முகமத், தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் தரப்பில், “நசார் முகமத் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டுக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய நபரால் கடத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் கொல்லப்பட்டார். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தலிபான்கள்தான் அவரைக் கடத்தி, கொலை செய்துள்ளதாக நசார் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கொல்லப்பட்ட நசார், கந்தஹார் ஆப்கன் போலீஸ் படையில் இதற்கு முன்னர் பணிபுரிந்தவர்” என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் நசார் கடத்தப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ஆப்கன் மக்களிடத்தில் தலிபான்கள் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஆப்கன் எல்லையில் 90% பகுதிகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

மே மாதத்திலிருந்து ஆப்கனில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

பின்னணி:

2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in