

ரஷ்யாவைச் சேர்ந்த ஊழல் போலீஸ்அதிகாரியின் வீட்டில் தங்கத்தில் கழிப்பறை, சர விளக்கு, தங்கமுலாம் பூசியகதவுகள், படிகள் அமைக்கப்பட்டிருப் பதைப் பார்த்து உலகமே வியந்துள்ளது.
ரஷ்யாவின் ஸ்ட்ராவ்போல் பிராந்தியத்தைச் சேர்ந்த போலீஸ் கர்னல் அலெக்சாய் சஃபோனோவ். இவர் தனக்கு கீழே பணிபுரியும் 35 அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரு மாஃபியா கும்பலை வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவரது வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் தங்கத்தினால் ஆன சரவிளக்குகள், தங்க முலாம் பூசிய கதவுகள், படிக்கட்டுகள், தங்கமுலாம் பூசப்பட்ட நாற்காலி, மேஜை உள்ளிட்ட மரச்சாமான்கள் உள்ளன. இதைக் கண்டதும் போலீஸ் அதிகாரிகள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
பின்னர் அந்த வீட்டில் இருந்த கழிப்பறையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த டாய்லட் சீட்டும் தங்கத்தில் செய்யப்பட்டு இருந்தது. சஃபோனோவ் தனக்குக் கிடைத்த ஊழல் பணத்தில் தனது வீட்டை தங்கத்தால் செதுக்கியுள்ளார் என்று தி மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலெக்சாய் சஃபோனோவ் மீதுள்ள குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு 8 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணை நடத்திய போலீஸார் அந்த வீட்டில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். தங்கத்தினால் ஆன பொருட்கள் மட்டுமல்லாமல் அந்த வீட்டையே சொர்க்கபுரியாக மாற்றி வைத்துள்ளார் அலெக்சாய் சஃபோனோவ். வீட்டினுள் அழகான புல்வெளியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த ஆடம்பர கார்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 20-ம் தேதி யூடியூபில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் 3.45 லட்சம் பேர் அந்த வீடியோவுக்கு லைக்கும் போட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக அலெக்சாய் சஃபோனோவும் அவரது கீழ் உள்ள அதிகாரிகளும் சுமார் ரூ.1.92 கோடி அளவுக்கு பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வர்த்தகத்துக்காக வாகனங்களுக்கு போலியான அனுமதி தருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.