நெல்சன் மன்டேலாவை கவுரவித்து விருது ஏற்படுத்துகிறது ஐ.நா.

நெல்சன் மன்டேலாவை கவுரவித்து விருது ஏற்படுத்துகிறது ஐ.நா.
Updated on
1 min read

நிறவெறி எதிர்ப்பு போராளியான நெல்சன் மன்டேலாவை கவுரவித்து விருது ஒன்றை ஏற்படுத்துகிறது ஐநா பொதுச்சபை.

‘ஐக்கிய நாடுகள் நெல்சன் ரோலிஹ்லாலா மன்டேலா பரிசு’ என்ற பெயரிலான இந்த விருதை அமைப்பதற்கான தீர்மானத்தை கருத்து ஒற்றுமை அடிப்படையில் ஐநா பொதுச்சபை ஏற்றுக்கொண்டது. அப்போது ஐநா பொதுச்செயலர் பான் கி மூன் பேசியதாவது:

மன்டேலா விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றுவதுதான் அவருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும். வெறும் வார்த்தைகளும் நிகழ்ச்சிகளும் சிறந்த அஞ்சலியாகாது.

இனவெறிக்கு எதிராக செயல்பட்ட வரலாறு கொண்டது ஐநா. தடைகள் விதித்த முந்தைய காலத்திலிருந்து ஜூலை 18-ம் தேதியை நெல்சன் மன்டேலா சர்வதேச தினமாக பிரகடனம் செய்த இப்போதைய காலம் வரை வரலாற்றின் சரியான பக்கத்திலும் ஐநா அமைப்பின் ஆதரவு கோருவோர் பக்கத்திலும் தன்னை வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஐ.நா. சபை.

இன்றைய தினத்தில் இந்த பரிசின் மூலமாக நெல்சன் மன்டேலாவின் ஆயுள்கால பணிகளை செயல்படுத்தி இன்னொரு அடி வைத்துள்ளது ஐ.நா. பொதுச்சபை.

தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை நெல்சன் மன்டேலா ஏற்றுக்கொண்டபோது கணக்கிலடங்கா மானுடர்களின் பிரதிநிதி என தன்னை வர்ணித்தார், பொது மனித நாகரிகத்துக்கும் நீதிக்கும் அரணாக நிற்க எல்லோருடனும் இணைந்து கைகோத்து செயல்பட்டார் என்று பான் கி மூன் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மூலம் பொதுச்சபை தலைவருடன் கலந்து ஆலோசனை நடத்தி, நடைமுறைகள், சட்ட திட்டங்களை வகுத்து அது அனுமதிக்கப்பட்டதிலிருந்து 6 மாதத்துக்குள் விருதை நிறுவும்படி பொதுச் செயலரை பொதுச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விருது தொடர்பான நடைமுறைகள், சட்ட திட்டங்களை 2014 நவம்பருக்குள் பொதுச்சபை அங்கீகரிக்கும்.

1994ல் தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக தேர்வான மன்டேலா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி மறைந் தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in