

இந்தியா மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று ஜமாத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் தலைவரும் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத் எச்சரிக்கை விடுத்துள் ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் உள்ள விமானப்படைத் தளம் மீது கடந்த ஜனவரி 2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சுமார் 80 மணி நேரம் நடைபெற்ற சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ தரப்பில் 7 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜமாத்-உத்-தவா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை பாகிஸ்தான் அரசிடம் மத்திய அரசு அளித்துள்ளது.
இது தொடர்பாக ஜமாத்- உத்-தவா அமைப்பைச் சேர்ந்த சிலரிடம் பாகிஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன் தலைவர் ஹபீஸ் சயீத் உள்ளிட்டோர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சயீத் பேசும்போது, “பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதான ஒரு தாக்குதலை மட்டுமே நீங்கள் பார்த்தீர்கள். இந்தியா மீது மேலும் இதுபோன்ற தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம். இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களை இனப்படுகொலை செய்கிறது. ஆனால், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதான்கோட் போன்ற தாக்குதலை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை” என்றார்.
மேலும் கடந்த ஜனவரி 2-ம் தேதி பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்ற காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிகாத் கவுன்சில் தலைவர் சையத் சலாஹுதீனையும் சயீத் பாராட்டி பேசினார்.
ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்தத் தடையை மீறி கடந்த மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் சயீத் பங்கேற்றார்.
ஜமாத் அமைப்பை தீவிரவாத அமைப்பாகவும் சயீதை தீவிரவாதியாகவும் ஐ.நா. கடந்த 2008-ம் ஆண்டே அறிவித்துவிட்டது. மேலும் சயீதின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.