

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான முதல் ‘மனநல மருத்துவமனை’ உருவாக்கப்பட்டிருக்கிறது. பொதுவாகவே பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. அதிலும் பெருந்தொற்றுக் காலத்தில் மனநலம் பாதிக்கப்படுபவர்களில் பெண்களே அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெண்கள் மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தயங்குகிறார்கள். பெண்களின் தயக்கத்தைப் போக்கி, சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காகவே பெண்களுக்கான பிரத்யேக மனநல மருத்துவமனையை ஆரம்பித்திருக்கிறார்கள், கபிரினி மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி சூ வில்லியம்ஸும் தலைவர் ஷரோன் ஷெர்வூடும்.
பெருந்தொற்றுக் காலத்தில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க நேர்ந்திருக்கிறது. இதனால் பல குடும்பங்களில் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. குடும்ப வன்முறைகளும் அதிகரித்திருக்கின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இருபாலர் மனநல மருத்துவமனைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்பதால் பெரும்பாலான பெண்கள் மருத்துவமனையை நாடுவதில்லை. இதனால் அவர்களின் மனநலப் பிரச்சினைகள் தீவிரமாகி, குணப்படுவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
“பொதுவாக மனநல பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள யோசிப்பார்கள். ஒருவேளை சிகிச்சை எடுத்துக்கொண்டு, பிரச்சினையிலிருந்து வெளிவர நினைப்பவர்கள்கூட, பொது மனநல மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக வரத் தயங்குகிறார்கள். அதனால்தான் 30 படுக்கைகள் கொண்ட பெண்களுக்கான முதல் மனநல மருத்துவமனையை ஆரம்பித்திருக்கிறோம். மனச் சோர்வு, பதற்றம், மன உளைச்சல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் போன்ற பிரச்சினைகளுக்கு இங்கே சிகிச்சையளிக்கப்படும். இது தனியார் மருத்துவமனைதான் என்றாலும் லாப நோக்கில் செயல்படாது. செப்டம்பர் முதல் இங்கே சிகிச்சையளிக்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த மருத்துவமனையில், பத்து நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அதற்குப் பிறகு தேவைப்பட்டால், அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சையைத் தொடரும் திட்டத்திலிருக்கிறோம்" என்கிறார் ஷரோன் வூட்.
“நாங்கள் பெருந்தொற்றுக் காலத்தில் மனநல மருத்துவமனைக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்தோம். சாதாரணமான காலத்தைவிடத் தொற்றுக் காலத்தில் மனநலப் பாதிப்பு பல மடங்கு அதிகமிருந்ததைக் கண்டுகொண்டோம். அதிலும் ஆண்களைவிடப் பெண்கள்தாம் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஏனென்றால் 2019ஆம் ஆண்டைவிட 2020ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை 9.4 சதவீதம் அதிகரித்திருந்தது. சில பெண்கள் மன அழுத்தம் தாங்க முடியாமல் போதைக்கும் அடிமையாகியிருக்கிறார்கள். அதனால் பெண்களுக்கென்று பிரத்யேகமாக மனநல மருத்துவமனையை உருவாக்க நினைத்தோம். மிகச் சிறந்த மனநல மருத்துவ நிபுணர்கள் இந்த மருத்துவமனையில் இருப்பார்கள். இதே போன்று பெண்களுக்கான மனநல மருத்துவமனைகளை ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகளிலும் கொண்டுவரும் முயற்சியிலிருக்கிறோம்” என்கிறார் சூ வில்லியம்ஸ்.