

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவுள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொகுப்பாளர்களில் ஒருவராக, இந்தியாவின் பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் கதாபாத்திரத்தில் நடித்து நாடு முழுவதும் பிரபலமான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு அமெரிக்க டிவியின் ‘குவான்டிகோ’ என்ற நெடுந்தொடரிலும் நடித்து சர்வதேச அளவில் பிரபலமானார்.
இந்நிலையில் வரும் 28-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவுள்ள 88-வது ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கும் 13 தொகுப்பாளர்களில் ஒருவராக பிரியங்கா சோப்ராவும் தேர்வாகியுள்ளார்.
இந்தத் தகவலை ஆஸ்கர் விருது அமைப்பு தன் அதிகாரபூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. ஏற்கெனவே கடந்த 30-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 22-வது திரைத்துறை சங்க விருது (ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் அவார்ட்ஸ்) நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக அவர் பங்கேற் றார். இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும் தொகுப்பாளராக தேர்வாகி இருப்பதால் பிரியங்கா சோப்ரா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் அவர், ‘‘ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மகிழ்ச்சியில் மிதக்கிறேன்’’ என்றார்.