

அமெரிக்க அரசு தடுப்பூசி இலக்கை எட்ட முடியாமல் இருப்பதற்கு தங்கள் மீது பழி சுமத்த கூடாது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே காரணம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு வாரியம் விமர்சித்திருந்தது. மேலும் இம்மாதிரியான மக்களின் மன நிலைக்கு சமூக ஊடங்களே காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதனை மறுத்து ஃபேஸ்புக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“ எங்களுடைய தரவுகளின்படி 85% ஃபேஸ்புக் பயனாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லது தடுப்பூசி போட விரும்புகிறவர்கள்தான். எனவே அமெரிக்க அதிபரின் இலக்கான ஜூலை 4 ஆம் தேதிக்குள்ளாக 70% அமெரிக்க மக்களுக்கு கரோனா தடுப்பூசி போட முடியாமல் சென்றதற்கு ஃபேஸ்புக் காரணமில்லை. எங்கள் மீது பழி போட வேண்டாம்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி கூறுகையில் ''டெல்டா வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தெளிவாகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தியுள்ளது. டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா சிறப்பாகச் செயல்படுகிறது . அமெரிக்காவில் சில இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் '' என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.