காற்று மாசு காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 55 லட்சம் பேர் உயிரிழப்பு: எச்சரிக்கும் சர்வதேச ஆய்வு முடிவு

காற்று மாசு காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 55 லட்சம் பேர் உயிரிழப்பு: எச்சரிக்கும் சர்வதேச ஆய்வு முடிவு
Updated on
1 min read

உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு சராசரியாக 55 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் 55 சதவீத அளவுக்கு உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து இந்தியா, சீனா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வாஷிங்டனில் உள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க சங்கத்தின் (AAAS) ஆண்டு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது காற்று மாசு குறித்த சர்வதேச குழுவின் ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

அதில் உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் வரும் ஆண்டுகளில் உயிரிழப்பின் சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்த அய்வறிக்கை குறித்து கனடாவின் வான்கூவரில் உள்ள பொது சுகாதார மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் தொகை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் உயிரிழப்புகள் அதிகம் நடப்பதற்கான நான்காவது காரணியாக காற்று மாசு உருவாகிவிட்டது. இதனால் நோய்கள் எளிதாக உருவாகுவதற்கும் அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

பொது மக்களின் உடல்நலத்தை மேம்படுத்த வேண்டுமெனில், காற்று மாசு ஏற்படுவதை நிச்சயம் குறைத்தாக வேண்டும். அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, அதிகப்படியான நிலக்கரியை எரிப்பதால் உண்டாகும் கரும்புகை ஆகியவை தான் காற்றில் கலந்து காற்று மாசு ஏற்பட காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் சமையலுக்காக மரங்கள் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் மிகப் பெரிய அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

கடந்த 2013-ல் இந்தியாவில் 14 லட்சம் பேரும், சீனாவில் 16 லட்சம் பேரும் காற்று மாசு காரணமாக உயிரிழந்திருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது உலக அளவில் 55 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in