

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா விரைவில் பணிக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா குடலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது உடல் நிலை குறித்த பல்வேறு தகவல்கள் வந்த நிலையில், தான் அவர் நன்றாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெய்ர் போல்சனோரா உடல் நலம் குறித்த அதிகாரபபூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “ பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா குணமடைந்து வருகிறார். விரைவில் தனது பணிக்குத் திரும்புவார்” என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் எந்த தேதி ஜெய்ர் போல்சனோரா மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆவார் என்று தெரிவிக்கவில்லை.
பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்கெனவே கூறிவந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
மேலும், கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டால் நீங்கள் முதலையாகவும் மாறலாம், பெண்களுக்கு தாடி வளரலாம் போன்ற கருத்துகளைப் பொதுவெளியில் பேசிவந்தார்.
உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கரோனா காரணமாக பிரேசிலில் வறுமையும் அதிகரித்து வருகிறது.