Published : 17 Jul 2021 03:38 PM
Last Updated : 17 Jul 2021 03:38 PM

40 ஆண்டுகளாக முடியாத போர்: ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?

ஆப்கானிஸ்தானின் கடந்த 40 ஆண்டுகால வரலாறு என்பது ஏவுகணைகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும், மனிதர்களின் குருதிகளையும், உடல்களையும் சுமந்து வருகிறது.

முதலில் சோவியத் யூனியன், பின்னர் தலிபான்கள், அல்கொய்தா, அமெரிக்கா என இந்தப் போரின் ஆக்கிரமிப்புக்கும், அதிகார வேட்கைக்கும் இந்த நாட்டு மக்கள் தங்கள் அமைதியையும், உயிரையும் தியாகம் செய்துள்ளார்கள்.

1979-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி சோவியத் யூனியனின் ரெட் ஆர்மி, ஆக்ஸஸ் ஆற்றைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தது. அதன்பின் சோவியத் யூனியனுக்கு எதிராக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முஜாகிதீன் ஆகியோர் அமெரிக்க நிதியுதவியுடன் போரிடத் தொடங்கினார்கள். இங்கு தொடங்கிய போர் அதன்பின் நிற்கவே இல்லை.

ஆப்கானிஸ்தான் கடந்த 40 ஆண்டு காலத்தில் கடந்து வந்த பாதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம்...

1980 - பாகிஸ்தான் சர்வாதிகாரி முகமது ஜியா உல் ஹக் மூலம் பண உதவியும், ஆயுத உதவியும் அமெரிக்க சிஐஏ ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியது.

1983 - அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், ஆப்கானிஸ்தான் முஜாகிதீன் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசினார் (தலிபான்களை வளர்த்துவிட்டதே ஒருவகையில் அமெரிக்காதான்).

1986 - ஆப்கானிஸ்தான் முஜாகிதீன்களுக்குத் தேவையான ஆயுதங்களும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வழங்கியது. சோவியத் யூனியனுடன் பேச்சுவார்த்தை தீவிரமானது.

1987 - ஆப்கானிஸ்தான் கம்யூனிஸ்ட் தலைவர் நஜிபுல்லா தேசிய மறுமலர்ச்சி திட்டத்தைக் கொண்டுவந்து, முஜாகிதீன்களைப் புதிய அரசில் பங்கேற்க அழைத்தார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர்.

1989 - கடந்த 10 ஆண்டு ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற சோவியத் யூனியன் சம்மதித்தது.

1992 (ஏப்ரல்) - முஜாகிதீன் படையினர் காபுலுக்குள் புகுந்து நஜ்புல்லாவை விடுவித்தனர். ஆனால், விமான நிலையம் வரும்போது அவர் சிறைப்பிடிக்கப்பட்டு ஐ.நா. முகாமில் தங்கவைக்கப்பட்டார்.

1992-1996- முஜாகிதீனின் 7 பிரிவுகளுக்கு இடையே அதிகாரத்தைப் பகிர ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1994- முஜாகிதீனின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து தெற்கு காந்தகாரில் தலிபான் படையினராக உருவெடுத்தார்கள்.

1996 - கடுமையான சண்டைக்குப் பின் காபூல் நகரை தலிபான்கள் கைப்பற்றினர்.

1996- 2001- தொடக்கத்தில் போரை முடித்துக்கொள்ள தலிபான்கள் ஒப்புதல் அளித்தனர். ஆனால், முல்லா ஓமர் தலைமையில் தலிபான்கள் ஆட்சி மிகக் கடுமையாக இருந்தது. தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றினர். பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன, கல்வி மறுக்கப்பட்டது.

2000- தலிபான்கள் ஓபியம் போதைப் பொருட்கள் உற்பத்தியை ஒழித்தனர். இதனால் அந்தத் தொழிலில் இருந்த ஏராளமான மக்கள் ஏழைகளாகினர்.

2001, மார்ச் - பாமியன் மாகாணத்தில் இருந்த மிகப்பெரிய புத்தர் சிலையை உடைத்தனர். இது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

2001, செப்- பின்லேடனை ஒப்படைக்குமாறு முல்லா ஓமருக்கு அமெரிக்ககா இறுதி கெடு விதித்தது.

2001, அக்7- அமெரிக்கக் கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் படையெடுத்தன.

2001- நவ 13- தலிபான்களிடம் இருந்து காபூலை அமெரிக்கக் கூட்டுப்படைகள் மீட்டு, தலைநகருக்குள் நுழைந்தன.

2001, டிச 7- காந்தகாரில் இருந்து முல்லா ஓமர் விலகிச் சென்றபின், தலிபான் ஆட்சி சீர்குலையத் தொடங்கியது.

2001, டிச 22- காபுல் நகருக்கு கர்ஸாய் வருகை. ஆப்கனை நிர்வகிக்கும் 29 உறுப்பினர்களுக்கும் கர்ஸாய் தலைவராகப் பொறுப்பேற்பு

2004- 2009 - ஆப்கனில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அங்கு கர்ஸாய் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2014, ஏப்.5- ஆப்கானிஸ்தானில் நடந்த தேர்தலில் அஸ்ரப் கானி, அப்துல்லா இருவரும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதன்பின் அதிகாரப் பகிர்வு அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேச்சுவார்த்தையில் அஷ்ரப் கானி அதிபராகவும், அப்துல்லா தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டனர்.

2015- 2018 - தலிபான்கள் மீண்டும் வலிமையாக உருவெடுத்து, நாள்தோறும் ஆப்கன் அரசுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் எதிராகத் தாக்குதல் நடத்தினர். கிழக்குப் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் உருவானது. தலிபான்கள் பாதிக்கும் மேற்பட்ட நாட்டைக் கைப்பற்றினர்.

2018, செப்- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கப் படைகளைத் திரும்பப்பெறும் வகையில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிகாரி ஜல்மே கலிஜாத்தை நியமித்தார்.

2019, செப்- ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டுப் பல மாதங்கள் முடிவு அறிவிக்கப்படவில்லை.

2019, நவ. 24- ஆப்கானிஸ்தான் சென்று அமெரிக்கப் படைகளை அதிபர் ட்ரம்ப் பார்வையிட்டார். தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

2020, பிப்.18 - ஆப்கானிஸ்தான் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அப்துல்லா தேர்தல் முடிவை ஏற்க மறுத்துவிட்டார்

2020, பிப் 29 - அமெரிக்கா, தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.

2021 - ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபரானதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்துக்குள்ளாக அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்று அறிவித்தார்.

2021, பிப் - ஜோ பைடனின் அறிவிப்பைத் தொடர்ந்து தலிபான்கள் தங்கள் தாக்குதலை அதிகப்படுத்தின. பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2021, பிப். - இதற்கிடையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், “எங்கள் தலைவர் முல்லா ஹிபாதுல்லா குண்டுவெடிப்பில் பலியாகவில்லை” என்று தலிபான்கள் விளக்கம் அளித்தனர்.

2021, ஜூன்- பக்ரம் விமானத் தளத்திலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் வெளியேறின. மேலும், ஆப்கன் போரில் வெற்றி இல்லை என்று, வன்முறையும், ராணுவ நடவடிக்கையும் தீர்வாகாது என்றும் அறிவித்தார்.

2021 ஜூலை - அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்தைத் தொடர்ந்து காந்தகார் உள்ளிட்ட பகுதிகளில் மிண்டும் தலிபான்கள் ஆதிக்கம் வளரத் தொடங்கியது. மேலும் நாட்டின் 85% பகுதிகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் அறிவித்தனர்.

2021 ஜூலை - மீண்டும் தலிபான்களின் ஆதிக்கத்துக்குக் கீழ் ஆப்கன் செல்வது தனக்கு அச்சத்தைத் தருவதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆப்கன் படைகள் - தலிபான்கள் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில்தான் நேற்று இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் வலுப்பெற்று வருகின்றனர். இதனால் அங்குள்ள பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச அளவில் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

மீண்டும் ஆப்கன், தலிபான்கள் பிடியில் சிக்குமா அல்லது மக்களின் ஜனநாயக ஆட்சி தொடருமா என்று பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x