Published : 17 Jul 2021 13:25 pm

Updated : 17 Jul 2021 13:25 pm

 

Published : 17 Jul 2021 01:25 PM
Last Updated : 17 Jul 2021 01:25 PM

சண்டையில் தலிபான்களுக்கு பாக். உதவுகிறது: ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு

air-support-to-afghan-taliban
படம்: டேனிஷ் சித்திக்

தலிபான்களுக்கு முக்கிய ஆதரவை பாகிஸ்தான் வழங்குவதாக ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் அம்ருல்லா சலே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அம்ருல்லா சலே கூறும்போது, “காந்தஹாரில் ஆப்கன் படைகளுடன் சண்டை புரிய தலிபான்களுக்கு பாகிஸ்தான் அரசு முக்கிய ஆதரவைத் தருகிறது. பாகிஸ்தான் விமானப் படைகள் முக்கியப் பகுதிகளில் தலிபான்களுக்கு உதவுகின்றன” என்றார்.


இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், அரசு சார் கட்டிடங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் - தலிபான்கள் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

பின்னணி:

2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!

ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான்தலிபான்கள்அமெரிக்காகந்தஹார்அமெரிக்கப் படைகள்One minute news

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x