Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதால் கலவரம்- இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு

தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதால் கலவரம் வெடித்துள்ளது. இதில், இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கில் கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு போட்டியாக ஆளும் கட்சியினரும் வன்முறையில் இறங்கியுள்ளனர். ஜேக்கப் ஜூமா அதிபராக பதவி வகித்தபோது, இந்தியர்களுக்கு நாட்டை தாரை வார்த்து விட்டனர் என்று அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கலவரத்தில்இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,200 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் நடத்தும் கடைகள்,வணிக வளாகங்கள் குறிவைத்துதாக்கப்படுகின்றன. அவர்களின் பணம், பொருட்கள் சூறையாடப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தென்னாப்பிரிக்காவில் சுமார் 6 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 75% பேர் கருப்பின மக்கள். 13% பேர் வெள்ளையின மக்கள். இந்திய வம்சாவளியினர் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.

இயல்பில் இந்திய மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள். தொழிலை தெய்வமாக மதித்துப்போற்றி, சிக்கனமாக வாழக்கூடியவர்கள் என்பதால் பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகமாக உள்ளனர். இதன் காரணமாக தற்போதைய வன்முறையில் இந்தியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு, பகல் கொள்ளை அரங்கேறுகிறது. இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை ரூ.512 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் கருப்பின, வெள்ளையின மக்கள் என எந்த பக்கமும் சாராமல் இந்திய வம்சாவளியினர் தனித்து வாழ்கின்றனர். இதுவும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வெள்ளையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் வரிந்து கட்டும் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,"இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். விரைவாக அமைதி திரும்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறைசெயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா,டெல்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதர் ஜோயலை சந்தித்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x