அமேசான் நிறுவனர் பெஸோஸைப் பார்த்து கொஞ்சம் பொறாமை தான்: சுந்தர் பிச்சை 

அமேசான் நிறுவனர் பெஸோஸைப் பார்த்து கொஞ்சம் பொறாமை தான்: சுந்தர் பிச்சை 
Updated on
1 min read

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸைப் பார்த்து தான் கொஞ்சம் பொறாமைப்படுவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஸோஸ், ப்ளூ ஆரிஜின் என்கிற தனியார் விண்வெளிப் பயணம் மற்றும் விண்கலங்கள் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதில் தயாரான, மனிதர்கள் பயணப்படக்கூடிய முதல் விண்கலத்தில், ஜெஃப் பெஸோஸும் அவரது சகோதரர் மார்க் பெஸோஸும் இணைந்து ஜூலை 20ஆம் தேதி விண்வெளிக்குப் பயணப்படவுள்ளனர்.

பூமியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடு என்று கூறப்படும் கார்மன் கோடு வரை கிட்டத்தட்ட 3,28,000 அடி இந்த விண்கலம் பயணப்படவுள்ளது.

ஜூலை 20-ஆம் தேதி நாசாவின் அபோல்லோ விண்கலம் நிலவில் தரையிறங்கிய தினம் என்பதால் அந்த தினத்தை பெஸோஸ் தேர்ந்தெடுத்துள்ளார். ப்ளூ ஆரிஜின் நிறுவனத்துக்குச் சொந்தமாக மேற்கு டெக்ஸாஸில் இருக்கும் ஏவுதளத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்படவுள்ளது.

பெஸோஸின் இந்த விண்வெளியப் பயணம் குறித்துப் பேசியிருக்கும் சுந்தர் பிச்சை, "ஆம், அவரது விண்வெளிப் பயணத்தைப் பார்த்து நான் கொஞ்சம் பொறாமைப்படுகிறேன். எனக்கும் விண்வெளியிலிருந்து பூமி எப்படிச் சுழல்கிறது என்பதைப் பார்க்க ஆசை தான்" என்று கூறியுள்ளார்.

பெஸோஸ் பயணப்படவிருக்கும் இந்த விண்கலத்தில் ஆறு பேர் பயணப்படலாம். அதில் ஒரு இருக்கைக்கான ஏலம் விடப்பட்டு அது கிட்டத்தட்ட 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை விலை பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தில் 143 நாடுகளில் இருந்து ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in