Published : 13 Jul 2021 03:40 PM
Last Updated : 13 Jul 2021 03:40 PM

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம்: ஜாக்கி சான் பேச்சு

தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாக நடிகர் ஜாக்கி சான் கூறியுள்ளார்.

ஜூலை 1ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு கொண்டாடப்பட்டது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசினார். இதுகுறித்து சீனத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் ஜாக்கி சான் தனது அரசியல் விருப்பம் குறித்துப் பேசியுள்ளார்.

67 வயதான ஜாக்கி சான், சீனத் திரைப்படச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே வெளிப்படையாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்து வருகிறார். அந்தக் கட்சியை, அதன் ஆட்சியைப் பாராட்டிப் பல ஊடகங்களில் பேசியுள்ளார்.

ஹாங்காங்கைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும், ஹாங்காங்கில் நடந்த ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தை எதிர்த்தும், அந்தப் போராட்டத்தை சீனா ஒடுக்கியதற்கு ஆதரவு தெரிவித்தும் அதிக விமர்சனத்துக்குள்ளானார்.

அதையும் மீறி தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் ஜாக்கி சான் பேசியுள்ளார்.

"சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேன்மை எனக்குத் தெரிகிறது. அந்தக் கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும். 100 வருடங்களுக்குள் நடக்கும் என்று சொல்வதை சில தசாப்தங்களிலேயே நடத்திக் காட்டும். நான் அதன் உறுப்பினராக விரும்புகிறேன்" என்று ஜாக்கி சான் பேசியுள்ளார்.

மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் செயல்படும் ராணுவப் பிரிவான எய்த் ரூட் ஆர்மியின் செயல்பாடுகளை, துணிச்சலைக் கண்டு தான் வியப்பதாகக் கூறிய ஜாக்கி சான், இரண்டாம் சீன ஜப்பானியப் போரில் இந்த ராணுவ வீரர்களின் துணிச்சலை நினைத்துப் பார்க்கும்போது தான் நெகிழ்வதாகவும் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x