

கோஹினூர் வைரம் பாகிஸ் தானுக்கு சொந்தம் என்று எந்த சட்டத்தின் அடிப்படையில் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒருங்கிணைந்த இந்தியாவை ஆண்ட கிழக்கு இந்தியா கம்பெனி, கடந்த 1849-ம் ஆண்டில் பஞ்சாப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்போது பஞ்சாப் மன்னராக இருந்த 14 வயது சிறுவனிடம் இருந்து கோஹினூர் வைரம் பறிக்கப்பட்டது. அந்த வைரம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அன்றைய மன்னர் ஆண்ட பகுதி தற்போது பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்துள்ளது. எனவே கோஹினூர் வைரம் பாகிஸ்தானுக்கே சொந்தம் என்றும் அதை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ஜாவித் இக்பால் ஜாப்ரி என்ற வழக்கறிஞர் சில நாட்களுக்கு முன்பு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி காலித் மெகவூத் கான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறிய தாவது: எந்த சட்டத்தின் அடிப் படையில் கோஹினூர் வைரம் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறீர்கள். அது தொடர்பான விவரங்களை மனுதாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
வரும் 25-ம் தேதி விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.
கோஹினூர் வைரத்தை இந்தியாவும் உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தியாவின் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு நிராகரித்துவிட்டது குறிப்பிடத் தக்கது.