

விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பது என்பது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது என்று விண்வெளிக்குச் சென்று திரும்பிய சிரிஷா பன்ட்லா கூறினார்.
உலக அளவில் பெரு நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டிநிலவி வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வர்ஜின் கேலக்டிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்துக்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம், விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் நேற்று முன்தினம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதில், வர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பன்ட்லா உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர்.
யூனிட்டி விண்கலம் விமானத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியை நோக்கி தனியாக பறந்தது. விண்வெளியை நெருங்கியதும், அங்கு புவிஈர்ப்பு விசை சிறிது குறைவாக உள்ள இடத்தில் விண்கலம் சிறிது நேரம் மிதந்தபடி இருந்தது. அப்போது வீரர்கள் விண்வெளி அனுபவத்தை உணர்ந்து உற்சாகமாக இருந்தனர். பின்னர் இன்ஜின்கள் எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி விமானம் போன்று தரையிறங்கியது.
பூமியிலிருந்து சுமார் 85 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் இயங்கி சாதனை படைத்தது.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த குழுவினரை அனைவரும் வாழ்த்தினர். அப்போது பிரான்சன் கூறும்போது, "இது எனது வாழ்நாளின் சிறந்த அனுபவம். மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன்" என்றார்.
இதுகுறித்து சிரிஷா பன்ட்லா கூறும்போது, "விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது. வாழ்க்கையை மாற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நான் இப்போதும் விண்வெளியில் இருப்பதாகவே உணர்கிறேன்.
நான் சிறுவயது முதலே விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். அது இப்போதுஉண்மையாகி உள்ளது" என்றார்.
சிரிஷா பன்ட்லா ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தார். பின்னர் அமெரிக்காவின் ஹூஸ்டனில் பெற்றோருடன் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.