Last Updated : 10 Jul, 2021 07:35 AM

 

Published : 10 Jul 2021 07:35 AM
Last Updated : 10 Jul 2021 07:35 AM

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் நியமனம்: அதிபர் ஜோ பிடன் உத்தரவு

இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மேயர் எரிக் கார்சிட்டி : ப டம் உதவி ட்விட்டர்

வாஷிங்டன்


இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மேயர் எரிக் கார்சிட்டியை நியமித்து அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் இருந்த கென்னத் ஜஸ்டர் மாற்றப்பட்டு கார்சிட்டி நியமிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தவாரத் தொடக்கத்தில்தான் ஜஸ்டர் வெளியுறவுத்தொடர்பு கவுன்சிலில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் “ லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மேயராகவும், 12 ஆண்டுகளாக நகர மேம்பாட்டுக் குழுவில் இருக்கும் எரிக் கார்சிட்டி இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை எரிக் கார்செட்டியும் உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் “ அதிபர் ஜோ பிடன் என்னை இந்தியாவுக்கான தூதராக பணியாற்ற நியமித்துள்ளார். அவரின் இந்த உத்தரவை நான் கவுரவத்துடன் ஏற்று பணியாற்றுவேன்.

நான் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரை விரும்புகிறேன், எப்போதும் அந்த நகரவாசியாகவே இருப்பேன். நான் உங்கள் மேயர்தான், ஒவ்வொரு நாளும் நகரத்தை அறிய விரும்வுவேன். நான் மேயராக பதவி ஏற்ற முதல் நாளைப் போல் இன்றுவரை உற்சாகம் குறையாமல், தீர்மானத்துடன், எனது பணியைச் செய்துள்ளேன்.

என்னுடைய வாழ்க்கையை சேவைக்காகவே அர்ப்பணித்துள்ளேன். சமூக செயல்பாட்டாளராக, ஆசிரியராக, கப்பற்படை அதிகாரியாக, அரசு ஊழியராக பணியாற்றுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மேயராக இருந்த கார்சிட்டி, மேற்கு ஹெமிஸ்பியரில் உள்ள உலகிலேயே மிகவும் பரபரப்பான கன்டெயர்னர் துறைமுகத்தை நிர்வாகம் செய்தவர். கடந்த 30 ஆண்டுகளில் மீண்டும் கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குப் பெற்றுக்கொடுத்த பெருமை கார்சிட்டிக்குச் சேரும்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்கக் கோரி அமெரிக்காவின் 400 மேயர்களை ஒருங்கிணைத்து காலநிலைக்கான மேயர் கூட்டமைப்பை கார்செட்டி உருவாக்கினார். உலகில் உள்ள 97 முக்கிய நகரங்கள் காலநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அந்த நகரங்களின் கூட்டமைப்பின் தலைவராகவும் கார்செட்டி உள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளில் அமெரிக்க கடற்படையின் உளவுத்துறை அதிகாரியாகவும், பாதுகாப்புத்துறையின் உளவுப்பிரிவிலும் கார்செட்டி பணியாற்றி கடந்த 2017ம் ஆண்டு லெப்டினென்டாக ஓய்வு பெற்றார்.
ஆக்ஸ்போர்டில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் படித்த கார்செட்டி, லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் கல்லூரில் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x