தடுப்பூசி செலுத்தாவிட்டால் வேலை இல்லை: கரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கிய ஃபிஜி

தடுப்பூசி செலுத்தாவிட்டால் வேலை இல்லை: கரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கிய ஃபிஜி
Updated on
2 min read

கரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கியுள்ள தெற்கு பசிபிக் நாடான ஃபிஜி, தடுப்பூசி செலுத்தாவிட்டால் வேலை இல்லை என்று தெரிவித்துள்ளது. அங்கு டெல்டா வைரஸ் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஃப்ராங்க் பைனிமாராமா தடுப்பூசி செலுத்தாவிட்டால் வேலை இல்லை என்று அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி சிறந்த ஆயுதம் என்று தெரிவிக்கப்படும் நிலையில், ஃபிஜி, கரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கியுள்ளது.

ஃபிஜியில் சுமார் 9.3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் வரை ஃபிஜியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறாத சூழலில், தற்போது டெல்டா வைரஸ் அங்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினந்தோறும் அங்கு 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபிஜியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசியைப் போட வேண்டும் என்றும், அவ்வாறு போடாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நவம்பர் 1-ம் தேதிக்குள் இரண்டாம் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையில் பணியாற்றுவோர் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் நபர்களுக்குக் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும், நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஃப்ராங்க் பைனிமாராமா, ''தடுப்பூசி செலுத்தாவிட்டால் வேலை கிடையாது. தடுப்பூசிகள்தான் வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ளப் பாதுகாப்பானவை என்று அறிவியல் சொல்கிறது. இதுவே இப்போது அரசின் கொள்கையாக உள்ளது. சட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர் ஃப்ராங்க் பைனிமாராமா
பிரதமர் ஃப்ராங்க் பைனிமாராமா

சிலர் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தலாமே என்று கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், ஃபிஜியில் அதைச் செய்ய முடியாது. நம்முடைய நிபுணர்கள், வைரஸை ஊரடங்கு கொன்றுவிடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், வேலைவாய்ப்பையும் நாட்டின் எதிர்காலத்தையும் ஊரடங்கு கொன்றுவிடும்.

தடுப்பூசி குறித்துச் சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அவற்றில் உண்மையில்லை. நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். எனக்குள் எந்த மைக்ரோ - சிப்பும் பொருத்தப்படவில்லை. மிருகத்தின் அல்லது வேறு எந்த உயிரினத்தின் அடையாளத்தையும் நான் பெறவில்லை. தடுப்பூசி அவ்வாறு எதையும் செய்துவிடாது'' என்று பிரதமர் ஃப்ராங்க் பைனிமாராமா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in