

இது வெல்ல முடியாத போர் என்று ஆப்கன் போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. இந்த நிலையில் ஆப்கன் போர் நிலவரம் குறித்து தனது கருத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, ''இது ஒரு வெல்ல முடியாத போர். ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினைகளுக்கு ராணுவ நடவடிக்கை தீர்வு அல்ல. இன்னும் எத்தனை அமெரிக்க மகள்கள் மற்றும் மகன்கள் அவர்கள் வாழ்வை ஆபத்தில் வைக்க முடியும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்காக நான் மற்றொரு தலைமுறையை அங்கு அனுப்பமாட்டேன். ஆப்கனில் அமெரிக்க ராணுவத்தின் பணி ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது.
நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு அந்த நாட்டைக் கட்டமைப்பதற்காகச் செல்லவில்லை. ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஒன்றுகூடி எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும்” என்றார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் முதலே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜோ பைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பு தற்போது ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் வந்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.