அமேசான் சிஇஓ ஜெஃப் பிஸோஸ் பதவியில் இருந்து விலக முடிவு

ஜெஃப் பிஸோஸ்
ஜெஃப் பிஸோஸ்
Updated on
1 min read

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் சர்வதேச அளவில் பிரபலமான அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் தற்போதைய தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப் பிஸோஸ் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். ஜூலை5-ம் தேதி தனது பதவி விலகலைஅதிகாரப்பூர்வமாக இவர் அறிவிக்கிறார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

57 வயதாகும் ஜெஃப் பிஸோஸ் 27 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக தனது வீட்டின் கார் ஷெட்டில் உருவாக்கியதுதான் அமேசான். தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும்புத்தகங்களை பதிப்பாளர்களிடமிருந்து வாங்கி அவற்றை தபால் அலுவலகம் மூலம் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் விதமாகத்தான் அமேசான் செயல் பட்டு வந்தது.

பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு இன்று பெரும்பாலான நாடுகளில் செயல்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசான் திகழ்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது அமேசான் அலெக்ஸாவாகும். தவிர விண்வெளி ஆராய்ச்சி,ஸ்ட்ரீமிங், கிளவுட் கம்ப்யூடிங்மற்றும் தொண்டு நடவடிக்கைகளிலும் இந்நிறுவனம் ஈடுபடு கிறது. இந்நிறுவனத்தின் சந்தைமதிப்பு 1.7 லட்சம் கோடி டாலர்.கடந்தாண்டு இந்நிறுவனத்தின் வருமானம் 38,600 கோடி டாலர்.

உலகின் பெரும் கோடீஸ்வரராக உயர்ந்த ஜெஃப் பிஸோஸின் நிகர சொத்து மதிப்பு 20,000 கோடி டாலர். சொத்தில் பாதி அளவை விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி மெக்கன்ஸி ஸ்காட்டுக்கு கொடுத்த பிறகும் இவரிடம் இந்த அளவுக்கு சொத்து உள்ளது.

பாதி சொத்தை பெற்ற இவரது முன்னாள் மனைவி, கோடீஸ்வர பெண்மணிகளில் முதலாவதாக உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in