இந்தோனேசியாவில் சிகிச்சை மையங்களாக மாறிய கார் பார்க்கிங் இடங்கள்

இந்தோனேசியாவில் சிகிச்சை மையங்களாக மாறிய கார் பார்க்கிங் இடங்கள்
Updated on
1 min read

இந்தோனேசியாவில் கரோனா வைரஸ் தீவிரத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “இந்தோனேசியாவில் டெல்டா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கார் பார்க்கிங்கில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளும் அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்குத் தனது தாயை இழந்த உதா வெரினா கூறும்போது, “நான் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குத் தொலைபேசியில் பேசும்போது, யாரும் எனது அழைப்பை எடுக்கவில்லை. படுக்கைகள் இல்லை. எனது தாய்க்குத் தாமதமாகவே சிகிச்சை கிடைத்தது. தற்போது அவர் இல்லை” என்றார்.

இந்தோனேசியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, மாடர்னா கரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தோனேசியாவுக்கு இதுவரை 40 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் கோவாக்ஸ் பகிர்வு திட்டத்தின் கீழ் தரப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகார்த்தா, ஜாவா பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மால்கள், மசூதிகளில் மக்கள் செல்வதற்கு அடுத்த இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in