Last Updated : 02 Jul, 2021 06:08 PM

 

Published : 02 Jul 2021 06:08 PM
Last Updated : 02 Jul 2021 06:08 PM

கரோனா முதல் அலையால் இந்தியாவில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் முறையற்ற பயன்பாடு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

பிரதிநிதித்துவப்படம்

வாஷிங்டன்

கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா வைரஸ் முதல் அலையால், இந்தியாவில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் முறையற்ற பயன்பாடு அதிகரி்த்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

லேசான மற்றும் மிதமான வைரஸ் நோய்களுக்கு எதிராக தாங்களாகவே ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை மக்கள் வாங்கி சாப்பிடுவது அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக காய்ச்சல், வைரஸ் தொற்று போன்றவற்றுக்கு முன்னெச்சரிக்கையாகவும், வந்தபின்பும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை மருந்துக் கடைகளில் மருத்துவர்களின் ஆலோசனையின்றி வாங்கிச் சாப்பிடுவதை பலர் செய்து வருகின்றனர். இது மிகவும் தவறானது என்று மருத்துவர்கள் பலரும் தெரிவி்த்துள்ளனர்.

மருத்துவர்கள் ஆலோசனையின்றி ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை நீண்டகாலத்துக்கு எடுப்பதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மட்டுப்படும். இதனால், சாதாரண காய்ச்சல், தொண்டைவலி, உடல்வலி ஏற்பட்டால்கூட ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தால்கூட பயனற்றுப்போகும். மேலும், வயிற்றில் உள்ள ஜீரனத்துக்கு துணைபுரியும் நல்ல பாக்டீரியாக்களையும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் அழித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம், கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் விற்பனை குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், 2018 முதல் 2020 டிசம்பர் வரை இந்தியாவில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் விற்பனை குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஐகியூவிஐஏ(IQVIA) என்ற நிறுவனத்திடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஏஎஸ் மெடிசின் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட மூத்த மருத்துவரும், பர்னஸ் ஜீஸ் மருத்துவமனையின் தொற்றுநோய்தடுப்பு பிரிவின் மருத்துவர் சுமந்த் கந்த்ரா கூறியதாவது:

" இந்தியாவில் கரோனா முதல் அலை ஏற்பட்ட காலத்தில் கூடுதலாக 21.64 கோடி ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் விற்பனையாகியுள்ளன, வயதுவந்தோருக்கு வழங்கப்படும் அசித்ரோமைஸின் மருந்துகள் 3.80 கோடி டோஸ்கள் கூடுதலாக ஜூன் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை விற்பனையாகியுள்ளன.

இந்தியாவில் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே சிறப்பாகச் செயல்படும், வைரஸ் தொற்றுக்கு எதிராக குறிப்பாக கோவிட்-19 தொற்றுக்கு எதிராகச் செயல்படாது. அதிகமான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டால், உடலில் மாற்றம் ஏற்பட்டு எந்த மருந்தும் உடலில் வேலை செய்யாத சூழல் ஏற்படலாம்.

ஆன்ட்டிபயாடிக் மருந்துகளையே எதிர்க்கும் திறன்தான் உலகளவில் மருத்துவத்துறையில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அதிகமான அளவு ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம், உடலில் சிறு காயங்கள், சாதாரண தொற்று ஏற்பட்டால்கூட அதை எதிர்த்து செயல்படும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தின் செயல்திறன் அளவை குறைத்துவிடும், இதன் மூலம் நிலைமை மோசமாகி, உயிரிழப்பைச் சந்திக்க நேரிடும்.

இந்தியாவில் விற்பனையான ஒட்டுமொத்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், அசித்ரோமைஸின் மருந்துகள் மட்டும் தனியாக எவ்வளவு விற்பனையாகின என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

கரோனா வைரஸுக்கு எதிராக அசித்ரோமைஸின் மருந்துகள் செயல்படுவதாக தொடக்கத்தில் ஆய்வுகள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளிலும் அந்த மருந்தின் விற்பனை அதிகரி்த்தது.ஆனால், இதுவரை அதற்குச் சான்றுகள் இல்லை.

2020ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1629 கோடி டோஸ் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த 2018, 2019ம் ஆண்டைவிட சிறிது குறைவாகும்.

வயது வந்தோருக்கு தரப்படும் மருந்துகள் விற்பனை 2018ல் 72 சதவீதமும், 2019ல் 72.5 சதவீதமும், 2020ல் 76.8 சதவீதமும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக இந்தியாவி்ல் அசித்ரோமைஸின் மருந்துகள் விற்பனை 2018்ல் 4 சதவீதமும், 2019ல் 4.5 சதவீதமும், 2020ல் 5.9சதவீதமும் அதிகரித்துள்ளன

மேலும், டாக்ஸிசைக்ளின், ஃபாரோபெனம் ஆகிய ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் விற்பனையும் இந்த காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளன.

மலேரியா, சிக்கன்குன்யா, டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்தி அனுபவம் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆதலால், ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவது குறைக்கப்பட வேண்டும். ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பாக அமையும்.

ஒட்டுமொத்த ஆய்வில், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை எடுத்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மருத்துவர் சுமந்த் கந்த்ரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x